Biography of Swami Vivekananda - சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு

1893 ஆம் ஆண்டு செப்டம்பர்  11-ஆம் தேதி இடம் அமெரிக்காவின் சிக்காகோ மாநிலம் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  பல்வேறு நாடுகளிலிருந்து பல சமயங்களை சேர்ந்த பேச்சாளர்கள் கூடியிருந்தனர். மிடுக்காக உடையணிந்த மேற்கத்திய மத போதகர்கள் லேடீஸ் & ஜெண்டில்மேன் என்று தொடங்கி தங்கள் சொற்பொழிவை ஆற்றினர். இந்தியாவை பிரதிநிதித்து ஒருவர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார் அவரது முறை வந்ததும் பேசுவதற்கு மேடை ஏறினார். தனக்கு முன் பேசியவர்கள் போல மிடுக்கான கோட் சூட் உடைகளைப்போல் அல்லாமல் காவி உடையும் தலைப்பாகையும் அணிந்திருந்த அவரை பார்த்தவுடன் அரங்கத்தில் லேசான சலசலப்பும் சிரிப்பும் பரவியது. சிலர் கேலியுடன் பார்த்தனர், வேறு சிலர் இவர் என்ன பேசப் போகிறார் என்று கொட்டாவி விட்டனர். இன்னும் சிலர் அருகில் அமர்ந்திருந்தவரிடம் பேசத் தொடங்கினர். அந்த அலட்சியத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் அமைதியாக சிறிது நேரம் அனைவரையும் பார்த்த பிறகு சகோதர சகோதரிகளே என்று தனது சொற்பொழிவை தொடங்கினார். அவர் கூட்டத்தினரை அவ்வாறு அழைத்த விதத்திலேயே அரங்கத்தில் உள்ள அனைவரின் கவனமும் அவர்மீது திரும்பியது சிறிது மவுனம் காத்த பிறகு தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேசி முடித்தபோது அரங்கம் வியப்போடு கைதட்டி அவருக்கு மரியாதை செய்தது. அவரது ஆடையிலிருந்த வித்தியாசத்தை மறந்து அவரின் பேச்சிலிருந்த உயர்ந்த கருத்துக்களை நினைத்து மகிழ்ந்தது. இந்தியா, இந்துமதம் பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்தும் கருத்துக்களை அந்த அந்நிய மேடையில் அழகாக முழங்கி மேற்கத்திய உலகில் மரியாதையைப் பெற்ற அந்த வரலாற்று நாயகர்தான் சுவாமி விவேகானந்தர்.