'Bulb' எனப்படும் மின்விளக்குகளை வாங்கிய அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கும். அப்படி வாங்கும்போது எத்தனை வாட் (Watt) சக்தி கொண்ட விளக்குகள் வேண்டும் என்று கேட்டு வாங்கியிருப்பீர்கள். வாட் (Watt) என்பது மின்சாரத்தைக் கணக்கிடும் ஓர் அளவு முறை. 'வாட்' என்பது வரலாற்றில் ஒரு மிகமுக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் ஒரு கண்டுபிடிப்பாளரின் பெயரும்கூட. மனுகுலத்திற்கு அவரது கண்டுபிடிப்பைக் கெளரவப்படுத்தவே மின்சாரத்தைக் கணக்கிடும் முறைக்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது. அப்படி என்ன முக்கியமான கண்டுபிடிப்பை அவர் செய்திருக்கிறார் என்று நீங்கள் யோசிக்கலாம்! அவரது கண்டுபிடிப்பு பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த 'Industrial Revolution' எனப்படும் தொழிற்புரட்சிக்கு ஆணி வேராக இருந்த ஒரு கண்டுபிடிப்பு.