இன்று நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகர் ஒருமுறை இவ்வாறு கூறினார். "பீத்தோவன் எப்படி இசைக்காக பிறந்தாரோ அதேபோல் நான் காற்பந்தாட்டத்திற்காக பிறந்தேன்" இது ஆணவத்தால் சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல. இப்படி ஒரு ஒப்பீட்டை அவர் செய்திருக்காவிட்டாலும் பின்னாளில் உலகம் நிச்சயம் செய்திருக்கும். அவர்தான் காற்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக இன்றும் விளங்கும் ஈடு இணையற்ற தி கிரேட்டஸ்ட் காற்பந்தாட்ட வீரர் பெலே.1940 ஆம் ஆண்டு அக்டோபர் 23ந்தேதி பிரேசிலின் Tres Coracoes என்ற பகுதியில் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் Edison Arantes do Nascimento எனப்படும் பெலே. அவரது தந்தை நிபுனத்துவ காற்பந்தாட்ட வீரராக இருந்தவர். அவரது முழங்காலில் காயம் ஏற்படவே அவர் காற்பந்தாட்டத்தை விட வேண்டிய நிலை ஏற்பட்டது. பெலேவுக்கு நான்கு வயதானபோது அவரது குடும்பம் Bauru என்ற பகுதிக்கு குடிபெயர்ந்தது. பெலேயும் அந்த வட்டாரத்தில் வசித்த சிறுவர்களும் காலுறையில் செய்தித்தாள்களை திணித்து ஒரு பந்துபோல் செய்து அதனைக்கொண்டு காற்பந்து விளையாடி மகிழ்வர். காலை முதல் மாலை வரை விளையாடுவார்கள். பெலேயின் தந்தையே அவருக்கு காற்பந்தாட்ட நுணுக்கங்களை கற்றுத்தந்தார். காற்பந்து ஆடாத நேரங்களில் பிறரது காலணிகளுக்கு பாலிஷ் போடும் வேலை செய்தார் பெலே.