1933-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4-ஆம் நாள் ஒரு தேசமே விரக்தியின் விளிம்பில் நின்றுகொண்டு நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியிருந்த காலகட்டம், எந்த திசை நோக்கினாலும் அங்கு அச்சம் ஆட்கொண்டிருந்தது. உலக வரலாறு 'Great Depression' எனப்படும் மாபெரும் பொருளியல் மந்தத்தின் அடிமட்டத்தை தொட்டிருந்த நேரம் அது. அமெரிக்காவில் பதின்மூன்று மில்லியன் பேர் வேலையில்லாமல் இருந்தனர். தொழிற்துறை உற்பத்தி பாதியாக குறைந்திருந்தது. பண்ணைகளும், வியாபாரங்களும் நொடித்துப் போயிருந்தன. மில்லியன் கணக்காணோர் வறுமைகோட்டைத் தாண்டி பசிகொடுமைக்கு ஆளாகியிருந்தனர். இரண்டு மில்லியன் பேர் தங்க வீடின்றி தெருக்களில் அலைந்தனர். வங்கி முறை கிட்டதட்ட செயலிழந்து போனது.