1945ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பர்மாவில் பிறந்தார் ஆங் சாங் சுகி, அவரது தந்தை உஆங் சாங் தான் நவீன மியன்மாரை நிறுவியவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரும் அவரது சகாக்களும் ஆட்சி பொறுப்பை ஏற்பதற்குமுன் அவர் ஓர் அரசியல் எதிரியால் படுகொலை செய்யப்பட்டார். அப்போது ஆங் சாங் சுகிக்கு வயது இரண்டுதான். உஆங் சாங்யின் வலது கையாக விளங்கிய திரு உநு இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் ஜனவரி 1948ஆம் ஆண்டு மியன்மார்கு சுதந்திரம் கிடைத்தது. பன்னிரண்டுகள் கழித்து 1960ல் ஆங் சாங் சுகியின் தாயார் திருமதி கின் கி இந்தியாவிற்கான பர்மிய தூதராக நியமிக்கப்பட்டார் எனவே பதினைந்தாவது வயதில் புதுடில்லிக்கு வந்து அங்கு தன் கல்வியை தொடர்ந்தார் ஆங் சாங் சுகி.
இதற்கிடையில் அவர் மியன்மாரை விட்டு சென்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1962ல் உநுவின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு சர்வாதிகார ராணுவ ஆட்சியை நிறுவினார் நீவின் அன்று நின்ற சுதந்திர காற்று இந்த 43 ஆண்டுகளாக (2005ஆம் ஆண்டு நிலவரப்படி) இன்னும் மயன்மாரில் வீசவில்லை. புதுடில்லியில் கான்வென்ட் ஆப் ஜீசஸ் அண்ட் மேரி பள்ளியில் படித்தபோது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்டார் ஆங் சாங் சுகி. பின்னர் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திற்கு சென்று அரசியல், தத்துவம், பொருளியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். ஆக்ஸ்போர்டில் இருந்தபோதே 1972ல் மைகேல் ஏரிஸ் என்ற பிரிட்டிஷ் பேராசிரியரை மணந்துகொண்டார். திருமணத்திற்கு அவர் விதித்த ஒரே நிபந்தனை என்ன தெரியுமா? எனது மக்களுக்கு எனது சேவை தேவைப்படும்பட்சத்தில் நீங்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதுதான். அந்த தம்பதியினர்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். பதினாறு ஆண்டுகள் கழித்து 1988ல் தனது தாயார் நோயுற்றபோது அவரை காண மியன்மார்கு வந்தார் ஆங் சாங் சுகி. தனது தந்தை நிறுவிய அந்த தேசம் சீரழிந்து கிடந்ததை பார்த்து உள்ளம் வெம்பினார். பர்மா உலகின் நெல் களஞ்சியம் என்ற நிலையிலிருந்து உலகின் மிக ஏழ்மையான நாடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்ததை எண்ணி கலங்கினார். அங்கு அரசியல் சுதந்திரமும் பறிக்கப்பட்டுருந்தது.
உணர்ச்சிவயப்பட்டு பின்னர் சும்மா இருபவர்களை காலம் மறக்கிறது. உணர்ச்சிவயப்பட்டு காரியத்தில் இறங்குபவர்களை வரலாறு துதிக்கிறது. தனது நாட்டிற்கு மாற்றம் தேவை என்று நம்பிய ஆங் சாங் சுகி அங்கேயே தங்கி மக்களாட்சிக்காக போராட முடிவெடுத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் சொன்ன வாசகம் இது “சொந்த பூமியிலேயே கைதிகள் போல் வாழ்கின்றனர் மியன்மார் மக்கள் அவர்களின் நலனில் அக்கறை கொண்ட எந்த குடிமகனும் ஒதுங்கி நிற்கும் நேரமல்ல இது. உடனே என்எல்டி (NLD National League for Democracy) எனப்படும் தேசிய ஜனநாயக லீக் கட்சியை நிறுவினார் ஆங் சாங் சுகி. அந்த கட்சிக்கு பொது மக்களிடையே கிடைத்த அமோக ஆதரவை கண்டு விழித்து கொண்டது இராணுவ ஆட்சி. 1990ஆம் ஆண்டு தேர்தல் நடுத்துவதாக அது உறுதி கூறியது. தேர்தலில் நிச்சியம் தோற்றுப்போவோம் என்று அறிந்த அந்த இராணுவ ஆட்சி என்ன செய்தது தெரியுமா? கோழைத்தனமாக 1989ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம்தேதி
To watch Biography of Aung san suu kyi in Tamil @ YouTube
ஆங் சான் சூச்சி மியான்மர் சுதந்திர போராட்ட வீராங்கனை வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்க
ஆங் சாங் சுகியை கைது செய்து வீட்டுகாவலில் வைத்தது. வீட்டுகாவலில் இருந்தவாறே 1990 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார் அவர். இராணுவ ஆட்சி திக்குமுக்காடி போகும் அளவுக்கு 82 விழுக்காடு வாக்குகளை பெற்று அசத்தியது அவரது கட்சி. மக்கள் தீர்ப்பை ஏற்க மறுத்த இராணுவ ஆட்சியோ தேர்தலை செல்லுபடியாகது என்று அறிவித்து அக்கட்சியின் தலைவர்களையும் கைது செய்தது. ஆங் சாங் சுகியின் செல்வாக்கை அறிந்த இராணுவ ஆட்சி நாட்டை விட்டு வெளியேறி அதன் பக்கமே தலை வைத்து படுக்காதிருந்தால் அவரை விடுதலை செய்வதாக அறிவித்தது. அதனை ஏற்றுக்கொண்ட ஆங் சாங் சுகி நான்கு நிபந்தனைகள் விதித்தார், ஒன்று எல்லா அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும், இரண்டு ஆட்சி மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், மூன்று தான் ஏன் நாட்டை விட்டு வெளியேறுகிறேன் என்பதை மக்களிடம் விளக்க வானொலியில் ஐந்து நிமிடம் தர வேண்டும், நான்கு பொது மக்கள் புடைசூழ தான் விமானநிலையத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அனால் அந்த நான்கு நிபந்தனைகளையும் நிராகரித்தது இராணுவ ஆட்சி. அவரது வீட்டுக்காவல் ஆறு ஆண்டுகளுக்கு நீடித்தது. விடுதலை செய்யப்பட்டபோதுக்கூட அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார். 2000ஆம் ஆண்டுல் அவர் மீண்டும் வீட்டுகாவலில் வைக்கப்பட்டார் பத்தொன்பது மாதங்களுக்கு. முன்றாவது முறையாக 2003ஆம் ஆண்டு மே மாதம் அவர் மீண்டும் வீட்டுகாவலில் வைக்கப்பட்டார். இன்று வரை (2005ஆம் ஆண்டு நிலவரப்படி) அது தொடர்கிறது.
மியன்மாரின் மேன்மைக்காக தனியோருவராக போராடிவரும் ஆங் சாங் சுகியை உலகச்சமுகம் போற்ற தவறவில்லை. 1991ஆம் ஆண்டு அமைதிக்காண நோபல்பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது அவர் வீட்டுகாவலில் இருந்ததலால் அவரது கணவர் அந்த பரிசை பெற்றுக்கொண்டார். 1993ஆம் ஆண்டு அனைத்துலக புரிந்துணர்வுகாண ஜவஹர்லால் நேரு விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தது இந்தியா. Power Corrupts என்ற ஆங்கில சொற்றொடரை கேள்விப்பட்டிருபீர்கள் அனால் ஆங் சாங் சுகி வித்தியாசமாக சொல்கிறார் “It is not Power that corrupts but Fear” அதாவது பலம் அல்ல பயம்தான் சீரழிவை தருகிறது என்கிறார் அந்த வீரப்பெண்மணி, எவ்வளவு வித்தியாசமான சிந்தனை, எவ்வளவு உண்மையான சிந்தனை. ஆங் சாங் சுகி என்ற பர்மிய பெயரின் பொருள் என்ன தெரியுமா? சிரமமான வெற்றிகளின் பிரகாசமான தொகுப்பு. அவரது பெயருக்கு ஏற்பவே ஜனநாயக பாதையில் மிகச்சிரமப்பட்டு, உயிரையே பணையம் வைத்து சிறிய சிறிய வெற்றிகளை அவர் குவித்துக்கொண்டிருக்கிறார். மியன்மாரில் இராணுவ ஆட்சி ஒழிந்து மக்களாட்சி மலர வேண்டும் என்ற தனது கனவு நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை அவர் இன்னும் கைவிடவில்லை.
நம்பிக்கையில்தான் உலகமே சுழல்கிறது என்பதை நன்கு அறிந்தவர் அவர். உலக வரலாற்றை உற்றுப்பார்தாலும் அந்த உண்மை புலப்படும். சர்வாதிகாரமும், அடக்குமுறையும், அராஜகமும் என்றாவது ஒருநாள் நீதியின் முன்னும், அஹிம்சையின் முன்னும் மண்டியிடத்தான் வேண்டும். அந்தநாள் மியன்மாரில் வெகு விரைவில் புலரும். அங்கு மக்களாட்சி மலரும் என்பதுதான் உலகம் முழுவதும் சுதந்திர விரும்பிகளின் எதிர்பார்ப்பு. சராசரி மனிதனின் சுதந்திர உணர்வுகள் மதிக்கப்படும் அந்தநாள் மியன்மாரில் விரைவில் மலரும்போது அது ஆங் சாங் சுகியின் அயராத போராட்டதிற்கு மகுடம்சூட்டும் நாளாக அமையும். அதுவரை நம்பிக்கைதான் அவரது உயிர்மூச்சாக இருக்கும். கவிஞர் பா.விஜய் சொன்னது போல் நம்பிக்கை உள்ளவனுக்கு தண்ணீரிலும் சுவாசிக்க முடியும். நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும். ஆங் சாங் சுகி என்ற அந்த அதிசிய பெண்ணிடமிருந்து நம்பிக்கையை கற்றுக்கொள்வோம் அதன் மூலம் நாம் விரும்பும் வானத்தை வசப்படுத்துவோம்.
To watch Biography of Aung san suu kyi in Tamil @ YouTube
ஆங் சான் சூச்சி மியான்மர் சுதந்திர போராட்ட வீராங்கனை வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்க