Biography of Sir C.V.Raman - சர்' சி.வி.ராமன் (அறிவியல் மேதை) - வாழ்க்கை வரலாறு

நவீன உலகின் பெரும்பாலான கூறுகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நேற்று வரை தெரியாதிருந்ததை இன்று தெரிய வைப்பதுதான் விஞ்ஞானம். இயற்கையின் அடிப்படைகள் என்றும் மாறுவதில்லை. அந்த மாறாத அடிப்படைகளை நமக்கு விளக்குவதுதான் விஞ்ஞானம். விளக்குபவர்கள்தான் விஞ்ஞானிகள். ஒவ்வொரு தேசமும் பல விஞ்ஞானிகளை உலகுக்குத் தந்திருக்கின்றன. அவ்வாறு நமது இந்திய தேசம் உலகுக்குத் தந்தவர்களில் முதன்மையானவர் 'சர்' சி.வி. ராமன்.1888 ஆம் ஆண்டு நவம்பர் 7ந்தேதி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார் சந்திரசேகர வெங்கட ராமன். அவரது தந்தைக்கு அறிவியலிலும், கணிதத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. இளம்வயதிலேயே அறிவுக்கூர்மை மிகுந்தவராக இருந்தார் சி.வி. ராமன். 1904 ஆம் ஆண்டு அவருக்கு பதினாறு வயதானபோது அவர் சென்னையின் பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அந்த ஆண்டில் அவருக்கு மட்டுமே முதல் நிலை தேர்ச்சியும், தங்கப்பதக்கமும் கிடைத்தன. அதே கல்லூரியில் அவர் பல சாதனைகளை முறியடித்து பெளதிகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். சி.வி. ராமனின் அறிவியல் திறமை இளம்வயதிலேயே வெளிப்பட்டது.