Biography of Sigmund Freud - சிக்மண்ட் ஃப்ராய்ட் வாழ்க்கை வரலாறு

ஆரம்பம் முதலே உடல் சம்பந்தபட்ட கிட்டதட்ட எல்லா நோய்களையுமே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனுகுலத்திற்கு இருந்தது. ஆனால் மனநோயை அவ்வாறு ஏற்றுக்கொள்ள ஏனோ மனுகுலம் தயங்கியது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட மனநோயை ஒரு சமூக அவலமாகவும், கேவலமாகவும்தான் பெரும்பாலோர் கருதினர். மனநோயாளிகளை உறவினர்களாக கொண்டவர்களைத் தவிர்த்து மற்ற அனைவருமே அவர்களை தீண்டத் தகாதவர்களாகவும், ஏன் சாத்தானின் படைப்புகளாககூட பார்த்தனர், நடத்தினர். ஆனால் மனநோயும் உடல்நோயைப் போன்றதுதான் அது சிகிச்சையளிக்கக்கூடிய ஒன்றுதான் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒருவர் துணிந்து கூறினார். மேலும் நாம் காணும் கனவுகளின் பொருள் பற்றியும் பல ஆய்வுகளை செய்து அதுவரை கூறப்படாதவற்றை தைரியமாக கூறி உலகின் புருவங்களை உயர்த்தினார். அவர்தான் 'psycho analysis' என்ற உளபகுப்பாய்வு முறையை உருவாக்கித் தந்த உலகம் போற்றும் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட்.