Biography of Edward Jenner - எட்வர்ட் ஜென்னர் வாழ்க்கை வரலாறு

மருத்துவ சிகிச்சையில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று நோய்கள் வராமல் தடுக்க சிகிச்சை வழங்குவது, மற்றொன்று வந்த நோய்களை குணப்படுத்த சிகிச்சையளிப்பது. இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றங்களால் சில நோய்கள் வராமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு சிகரெட் புகைக்காதிருந்தால் நுரையீரல் புற்று நோயைத் தவிர்க்கலாம். ஆனால் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலும் வந்தே தீரும் என சில நோய்கள் இருந்தன. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை. காரணம் தெரியாமல் வந்த அந்த நோய்கள் மனுகுலத்தை ஆட்டிப் படைத்தன. அப்படிப்பட்ட கொடிய நோய்களுள் ஒன்று 'Smallpox' எனப்படும் பெரியம்மை நோய். பயங்கர தொற்று நோயாக இருந்து பல்லாயிரக்கணக்கானோரின் மரணத்திற்கு காரணமாக இருந்த அந்த நோயை தடுக்கும் முறையைக் கண்டுபிடித்த ஒரு மருத்துவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் உலகத்தின் முகத்திலிருந்து பெரியம்மை நோயை ஒட்டுமொத்தமாக துடைத்தொழித்த உன்னத மருத்துவர் எட்வர்ட் ஜென்னர்.