ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும். நோபல் பரிசு ஒன்றுதான் தேச மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டுதோறும் கவுரவுக்கிறது. நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலைபெற்றிருக்கிறது. இன்று பலரை ஆக்க வழியில் சிந்திக்க தூண்டும் அந்த நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? அழிவுசக்தியை உருவாக்கி அதனால் மனம் நொந்துபோன ஒரு விஞ்ஞானி தனக்கு ஏற்படப்போகும் களங்கத்தை துடைத்துக்கொள்ள உருவாக்கியதுதான் நோபல் பரிசு. அந்த அழிவுசக்தி டைனமைட் எனப்படும் வெடிமருந்து, அந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல்.