சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியைவிட நாடு இரண்டாகப் பிளவுபட்டதை எண்ணிக் கலங்கிய காந்தியடிகள் அன்றைய தினம் டெல்லியைவிட்டு வெகுதொலைவில் உள்ள கல்கத்தாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். தன் கடைசி மூச்சுவரை அந்தப் பிரிவினையால் துயருற்றியிருந்தார் காந்தியடிகள். அவர் அஞ்சியதுபோலவே இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்த ஒருசில தினங்களுக்குள்ளாகவே இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருந்து லட்சக்கணக்கான இந்துக்கள் இந்தியாவுக்கும் இடம்பெயர்ந்தனர். சொந்த நிலம், வீடு, சொத்து, வியாபாரம், வேலை, கல்வி, நண்பர்கள் என அனைத்தையும் விட்டு தங்கள் எதிர்காலத்திற்கு அஞ்சி மக்கள் இந்தியா, பாகிஸ்தான் எல்லையை கடந்தபோது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. சுதந்திரம் கிடைத்தும் அந்த மதக்கலவரக் கொடுமையில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர்.
தன் வாழ்நாள் முழுவதும் இந்து - முஸ்லிம் ஒற்றுமையையும், ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவையுமே கற்பனை செய்து வந்த காந்தியடிகள் ஒடிந்துபோனார். கசப்புணர்வு மேம்பட்டிருந்தாலும் அப்போதுகூட அவர் எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கிவிட்டு ஒதுங்கிவிடவில்லை. மதக்கலவரத்தால் துவண்டு போயிருந்த மக்களுக்கு ஆறுதலும் அமைதியும் கூற 'நவக்காளி' யாத்திரை மேற்கொண்டார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 5 மாதங்களே ஆகியிருந்த நிலையில் அதனைப் பெற்றுத் தந்தவரின் உயிருக்கு சுதந்திரம் தர எத்தனித்தான் நாதுராம் கோட்ஸே என்ற ஒரு மதவெறியன். 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ந்தேதி புதுதில்லியில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்தார் காந்தியடிகள். சரியாக 10 நாட்களுக்கு முன்னர் அதேபோன்ற ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஓர் இளைஞன் காந்தியடிகளை நோக்கி குண்டு வீசினான். அதில் காயமின்றி தப்பிய காந்தியடிகள் அந்த இளைஞனை மன்னித்து விடுமாறு கூறி போலீஸார் வழங்க முன்வந்த கூடுதல் பாதுகாப்பை நிராகரித்து விட்டார்.
உயிருக்கு ஆபத்து என்ற அந்தப் பின்னனியில் ஜனவரி 30ந்தேதி இன்னொரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். அன்றைய தினம் காந்தியடிகளை குனிந்து வணங்குவதுபோல பாவனை செய்துவிட்டு நிமிர்ந்தான் அந்த மதவெறியன். அவனை வணங்குவதற்காக கைகளைக் கூப்பினார் காந்தியடிகள். சற்றும் சிந்திக்காமல் தன் கைத் துப்பாக்கியைக் கொண்டு கைக்கூப்பியிருந்த காந்தியடிகளை நோக்கிச் சுட்டான் அவன். மூன்று குண்டுகள் அன்னலின் மெலிந்த தேகத்தைப் பதம்பார்த்தன. கைகள் கூப்பிய நிலையிலேயே ஹேராம்...ஹேராம் என்ற வார்த்தைகளை உதிர்த்து சரிந்தார் காந்தியடிகள். இந்திய நேரப்படி மாலை சுமார் 5 மணிக்கு பிரிந்தது அந்தத் தேசப்பிதாவின் உயிர். தன் கடைசி மூச்சுவரை அகிம்சையைப் போதித்த அந்த மாமனிதனுக்கு அமைதியான மரணத்தை வழங்க முடியாத கலங்கத்தை இன்றுவரை சுமந்து நிற்கிறது இந்தியா.
தன் வாழ்நாளில் தீண்டாமை ஒழிப்புக்காக அரும்பாடுபட்டார் காந்தியடிகள். தீண்டத்தகாதவர்கள் எவரும் கிடையாது என்று கூறிய அவர் தீண்டாமையைக் கடவுளுக்கு எதிரான பாவச்செயல் என்றும் சாடினார். ஒருமுறை தனது ஆசிரமத்தில் தீண்டத்தகாத ஆசிரியரையும், அவரது குடும்பத்தையும் சேர்த்துக் கொண்டபோது அவரது மனைவிகூட அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். தீண்டாமையை இந்தியாவின் அவமானம் என்று கூறிய காந்தியடிகள் என்ன செய்தார் தெரியுமா? அவர்கள் இந்த ஆசிரமத்தில் தங்குவதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீ இந்த ஆசிரமத்தை விட்டு வெளியேறலாம் என்று தனது மனைவியைப் பார்த்து கூறினார். கஸ்தூரிபாய் வேறு வழியின்றி அமைதியானார். தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஹரிஜன்ஸ் என்று பெயரிட்டார் காந்தியடிகள். அதன் பொருள் கடவுளின் பிள்ளைகள் என்பதாகும்.
தனது சத்திய சோதனை என்ற நூலில் காந்தியடிகள் புகழ்பெற்ற ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். ஆங்கிலேயர்களை அவர்களில் கைகளில் படிந்திருக்கும் ரத்தக்கறையைக் கழுவுமாறு நாம் சொல்வதற்கு முன் இந்துக்களாகிய நாம் நம் கைகளில் படிந்திருக்கும் ரத்தக்கறையை கழுவ வேண்டாமா? என்று தீண்டாமைக் குறித்து ஆதங்கத்தோடு கேள்வியெழுப்பினார் காந்தியடிகள். அவரது போராட்டங்களால் தீண்டத்தகாதவர்களை ஒரு தனிச்சமூகமாகக் கருதி அவர்களுக்கு தனி ஓட்டுரிமை வழங்க பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவெடுத்தது. ஆனால் அவ்வாறு செய்வது பிரச்சினையை இன்னும் மோசமாக்கும் என்று நம்பிய காந்தியடிகள் துணிவான ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். ஹரிஜனங்கள் தனிச்சமூகம் என்ற திட்டத்தைக் கைவிடா விட்டால் சாகும் வரை உண்ணா விரதம் இருக்கப் போவதாக பூனா சிறையிலிருந்தவாறே அறிவித்தார். அவரது வைராக்கியத்தைக் கண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் பூனா ஒப்பந்தத்திற்கு இணங்கியது. அதன்படி இனிமேல் இந்துக்களில் பிறப்பின் காரணமாக எவரும் கீழ்சாதி என்பது கிடையாது என்று அறிவித்து தனது உண்ணாவிரத்தை முடித்தார் காந்தியடிகள்.
To Watch Mahatma Gandhi Biography part 2 in YouTube
மஹாத்மா காந்தியடிகள் (வரலாற்று நாயகர்) பாகம் - 2 யூடுபில் பார்க்க
மஹாத்மா காந்தியடிகள் (வரலாற்று நாயகர்) பாகம் - 2 யூடுபில் பார்க்க
காந்தியடிகள் எவ்வளவு தெளிவான சிந்தனையுடயவர் என்பதற்கு இன்னொரு சம்பவம் தன் ஆசிரமத்தில் நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு கன்றுக்குட்டியின் வேதனையைப் பார்த்து கலங்கிய அவர் அதனை கொன்று விடுமாறு கூறினார். பசுவைக் கொல்வது பாவம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவே சில தீவிர இந்துக்கள் அவரைப் பாவி என்று வசைபாடினர். ஆனால் வேதங்களை விட ஓர் உயிரின் வேதனைதான் அன்னலின் கண்களுக்குப் பெரிதாகப்பட்டது. 1922 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியடிகளை சிறையில் அடைத்தது. சிறையிலிருந்தபோது அவர் பைபிள், குர்ரான் போன்ற நூல்களையும், இந்து வேதங்களையும் படித்தார். தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார். 1925ல் காங்கிரஸ் தலைமைத்துவத்திலிருந்து விலகிய காந்தியடிகள் அடுத்த மூன்று ஆண்டுகள் கிராமம் கிராமமாக சென்று இராட்டினம் மூலம் சுய தொழில் செய்வதைப் பற்றியும், ஒத்துழையாமைப் பற்றியும் மக்களிடம் பேசினார்.
அவ்வாறு ஒருமுறை பேசியபோது கிராம மக்கள் சேர்ந்து காந்தியடிகளுக்கு மலர்மாலை அணிவித்தனர். அப்போது அவர்களைப்பார்த்து இந்த மலர்மாலைக்காக நீங்கள் செலவழித்த ஒவ்வொரு ரூபாயும் 16 பேர்களுக்கு ஒருவேளை உணவு வாங்கி தர உதவும் என்று கூறினார். கட்டாயத்தின் பேரில் தான் பால்ய விவாகம் செய்து கொண்டாலும் அதனை வன்மையாக எதிர்த்தார் காந்தியடிகள். பிள்ளைகளின் வாழ்க்கை குலைக்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். விதவைகளைப் பார்த்து மறுமணம் செய்துகொள்ளுமாறு கூறினார். கணவனை இழந்த ஒவ்வொரு பெண்ணும் மறுமணம் செய்துகொள்வது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்று முழங்கினார். உலகிலேயே பயங்கரமான ஆயுதம் நாக்கு என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொருவரும் நாக்கைக் கட்டுப்படுத்தினால் உலகில் பாதி பிரச்சினைகள் ஒழிந்துவிடும் என்று நம்பிய காந்தியடிகள் என்ன செய்தார் தெரியுமா? தன் வாழ்நாள் முழுவதும் திங்கள் கிழமைகளில் மவுன விரதம் இருந்தார். ஒரு மணிநேரம்கூட மவுனமாக இருப்பது நம்மில் பலருக்கு முடியாத காரியம். ஆனால் அரசியலில் ஈடுபட்டிருந்தபோதுகூட, எவ்வளவு பெரிய நபர்களை சந்திக்க வேண்டியிருந்தபோதும்கூட திங்கள் கிழமை மவுன விரதத்தைக் கைவிட்டதில்லை காந்தியடிகள்.
நாடு முழுவதும் இரயில் பயணம் மேற்கொண்ட போதெல்லாம் காந்தியடிகள் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் செய்தார். சாதரண மக்கள் சிரமப்படும்போது தனக்கு செளகரியங்கள் தேவையில்லை என்பதுதான் அவரது எண்ணம். அதே எண்ணம் அவரது ஆடையிலும் பிரதிபலித்தது. இந்தியர்களின் வறுமை நிலையைப் பார்த்து மனம் வெம்பியதால்தான் காந்தியடிகள் நான்கு முழத் துண்டை மட்டும் ஆடையாக அணியத் தொடங்கினார். இப்படி தன் மக்களுக்காக துயருற்று அவர்கள் அனுபவித்த வேதனைகளை தானும் அனுபவித்து மக்கள் நலனை மட்டுமே குறியாக கொண்டு செயலாற்றிய வேறு ஒரு தலைவர் உலக வரலாற்றில் இருந்திப்பாரா என்பது சந்தேகமே. உண்மை பேசுவதைவிட ஒரு சிறந்த பண்பு இருக்க முடியாது என்று உளமாற நம்பிய காந்தியடிகள் My Experiments with Truth என்ற புகழ்பெற்ற சுயசரிதையையும் எழுதினார். முழுமையாகத் தெரிந்துகொள்ள 'சத்திய சோதனை' என்ற அந்த நூலை படித்துப் பாருங்கள்.
உலக சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் ஓர் உண்மை புலப்படும். உலகில் ஏற்பட்ட எந்த புரட்சியும் ஆயுதம் ஏந்தாமல், இரத்தம் சிந்தாமல், உயிர்பலி இல்லாமல் வெற்றி பெற்றதில்லை. அந்த விதியை மாற்றி அமைத்தவர் அன்னல் காந்தியடிகள். கத்தியின்றி இரத்தமின்றி கண்டனப் போராட்டம், வரிகொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், உண்ணாவிரதம், உப்பு சத்தியாகிரகம், சட்டமறுப்பு இயக்கம் என அகிம்சை வழியிலேயே ஒரு புரட்சியை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் காந்தியடிகள். அதனால்தான் அன்னல் காந்தியடிகளைப் பற்றி சிங்கப்பூரின் மதியுரை அமைச்சர் லீ குவான் யூ ஒருமுறை உரையாற்றும்போது நான் ஒரு இந்திய போப்பாக இருந்திருந்தால் மஹாத்மா காந்திக்கு 'புனிதர்' பட்டம் வழங்கியிருப்பேன் என்று கூறினார். இப்படி உலக தலைவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மனுகுலமும் காந்தியடிகளை போற்றிப் புகழ்ந்து கொண்டாடுவதற்கு அடிப்படைக் காரணம் அவர் உலகுக்குத் தந்த இரண்டு மாபெரும் கொடைகளான அகிம்சை, வாய்மை.
இந்த அவசர உலகில் அகிம்சைக்கும், வாய்மைக்கும் இடம் உண்டு என்பதை வாழ்ந்து காட்டியதால்தான் உலகம் அவரை மட்டும் 'மஹாத்மா' என்றழைக்கிறது. அந்த ஒப்பற்ற ஜீவன் பின்பற்றிய அகிம்சையையும், வாய்மையையும் பின்பற்றும் எவருக்கும் வானத்தை வசப்படுத்துவது இயற்கையின் கடமையாகும்.
To Watch Mahatma Gandhi Biography part 2 in YouTube
மஹாத்மா காந்தியடிகள் (வரலாற்று நாயகர்) பாகம் - 2 யூடுபில் பார்க்க
மஹாத்மா காந்தியடிகள் (வரலாற்று நாயகர்) பாகம் - 2 யூடுபில் பார்க்க