Biography of Jesse Owens - ஜெசி ஓவன்ஸ் வாழ்க்கை வரலாறு

ஹிட்லரின் சித்தாத்தம் ஒன்றை மூக்குடையச் செய்து தோலின் நிறத்தால் மட்டுமே ஓர் இனம் இன்னொரு இனத்தை விட சிறந்ததாகி விட முடியாது என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டிய ஒரு அதிசய விளையாட்டு வீரரைப் பற்றித் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். ஆரிய இனமே உலகில் மிகச்சிறந்த இனம், வெள்ளைத்தோல் உடையர்வர்கள்தான் எதிலும் சிறக்க முடியும் என்ற ஹிட்லரின் அபத்தமான நம்பிக்கையை தவிடு பொடியாக்கிய அந்த வரலாற்று நாயகரின் பெயர் ஜெசி ஓவன்ஸ்.


அந்தப் பெயரை ஒலிம்பிக் போட்டிகள் என்ற வானம் இன்றும் பெருமையுடன் சுமந்து நிற்கிறது. ஜேம்ஸ் கிளீவ்லண்ட் ஓவன்ஸ் 1913 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ந்தேதி அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஓர் எளிமையான கருப்பர் இன குடும்பத்தில் ஏழாவது பிள்ளையாக பிறந்தார். அவரது தாத்தா கொத்தடிமையாக இருந்தவர். James Cleveland Owens என்பதன் முதல் எழுத்துக்களைக் கொண்டு ஓவன்ஸை எல்லோரும் J C என்று அழைப்பார்கள். அவர் பள்ளிக்குச் சென்ற முதல் நாள் அவரது பெயரை ஆசிரியர் கேட்க ஜெ சி என்று சொல்ல அதனை ஜெசி என்று எழுதிக்கொண்டார் அந்த ஆசிரியர். அன்றிலிருந்து அவரது பெயர் ஜெசி ஓவன்ஸ் என்றானது. குடும்பம் ஏழ்மையாக இருந்ததால் வாழ்க்கை சிரமமாக இருந்தது. குடும்பத்திற்கு உதவ மளிகைப்பொருட்களை விநியோகம் செய்வது, காலணிகள் பழுது பார்ப்பது, மின்தூக்கிகள் இயக்குவது போன்ற பல்வேறு வேலைகளைச் செய்தார் ஜெசி. அந்த வேலைகளைச் செய்யும்போதுதான் ஓடுவது என்றால் தனக்கு பிடிக்கும் என்பதை உணர்ந்தார் அவர். அந்தத் தெளிவுதான் அவரது வாழ்க்கையை மாற்றி அமைத்தது.

பள்ளியில் ஒருநாள் அறுபது மீட்டர் தூரம் ஓடும் பயிற்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஓடிய ஜெசியைப் பார்த்து அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதை உணர்ந்தார் பயிற்றுவிப்பாளர் சார்லி ரைலி. ஜெசிக்கு நல்ல பயிற்சி அளிக்க விரும்பினார். ஆனால் பள்ளி முடிந்து பல வேலைகள் பார்க்கும் நிர்பந்தம் இருந்ததால் எப்படி பயிற்சியில் ஈடுபடுவது என்று தயங்கினார் ஜெசி. அவரது நிலையை புரிந்துகொண்ட ரைலி காலை நேரங்களில் தனியாக பயிற்சியளிப்பதாக கூறவே அதனை ஏற்றுக்கொண்டார் ஜெசி. அதிலிருந்து அவர் பட்டைத் தீட்டிய வைரமாக ஜொலிக்கத் தொடங்கினார். அவருக்கு 19 வயதானபோது கல்லூரித் திடல்திடப் போட்டிகளில் நூறு மீட்டர் ஓட்டத்தில் அப்போதிருந்த உலகச் சாதனையை சமன் செய்தார். அவரது அபாரத் திறனைக் கண்ட அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அவரை தங்கள் மாணவராக்கிக் கொள்ள போட்டிப் போட்டனர்.

To watch Biography of Jessie Owens in Tamil @ YouTube

ஜெசி ஓவன்ஸ் (Olympic Legend) - வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்க



அப்படி முன்வந்த 28 பல்கலைக்கழகங்களிலிருந்து ஒஹாயோ ஸ்டேட் (Ohio State University) பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தார் ஜெசி ஓவன்ஸ். அப்போது அமெரிக்காவில் இன ஒதுக்கல் நடப்பில் இருந்ததால் பல இன்னல்களைச் சந்தித்தார் ஜெசி. அவர் கருப்பர் என்பதால் பல்கலைக்கழக வளாகத்தில் தங்க அனுமதி மறுக்கப்பட்டது. திடல்திட விளையாட்டுக் குழுக்களோடு பயணம் செய்யும்போது கருப்பர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட உணவகங்களிலும், ஹோட்டல்களில் மட்டும்தான் அவர் உணவு உண்ண முடியும், தங்க முடியும். அல்லது உண்வை பொட்டலமாக வாங்கி வெளியில் சாப்பிட வேண்டும். தவிர்க்க முடியாத சில சமயங்களில் வெள்ளையர்களின் ஹோட்டல்களில் தங்க அனுமதிக்கப்பட்டாலும் அவர் பின் கதவு வழியாகத்தான் நுழைய அனுமதிக்கப்பட்டார். மேலும் ஹோட்டலுக்குள் மின் தூக்கியைப் பயன்படுத்தக்கூடாது. படிகளில் ஏற வேண்டும்.

இப்படி வெள்ளை இன பெரும்பான்மையினரால் எல்லா விதங்களிலும் ஒதுக்கப்பட்ட ஓவன்ஸ் அவரது ஓட்டத்திறமைக்காக மட்டும் விரும்பபட்டார். தனக்கு இழைக்கப்படும் சமூக அநீகளுக்கு தன் கால்களாலேயே பதிலடி தந்தார் ஓவன்ஸ். 1935 ஆம் ஆண்டு மே 25ந்தேதி ஓர் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார். அந்த ஒரே நாளில் அவர் மூன்று உலகச் சாதனையை நிகழ்த்தி நான்காவது சாதனையைச் சமன் செய்தார். அதற்கு அவர் எடுத்துக்கொண்ட நேரம் எவ்வுளவு தெரியுமா? வெறும் 45 நிமிடங்கள்தான். விளையாட்டு உலகில் அதற்கு முன்னும் அப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டதில்லை, அதற்குப் பிறகும் அந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை. அந்த அதிசயத்தை நிகழ்த்திய அடுத்த ஆண்டே உலகை வியப்பிலும், ஹிட்லரை வெறுப்பிலும் ஆழ்த்தினார் ஜெசி ஓவன்ஸ். 1936 ஆம் ஆண்டு பெர்லனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் பிரகாசமாக மின்னினார்.

ஹிட்லர் அப்போது ஆட்சியில் இருந்ததால் பலர் ஹிட்லர் ஒலிம்பிக் போட்டிகள் என்றும் அதனை வருணித்தனர். ஆரியர்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற இருமாப்போடு அமர்ந்திருந்த ஹிட்லரின் கண்களுக்கு முன்னே ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று உலகச் சாதனைகளோடு நான்கு தங்கப்பதக்கங்களை வென்று குவித்தார் ஜெசி ஓவன்ஸ். உலகின் கண்களுக்கு முன் தனது சித்தாந்தம் சிதைந்து போன வெறுப்பில் ஒலிம்பிக்ஸ் அரங்கத்தை விட்டு ஆத்திரத்தோடு வெளிநடப்புச் செய்தார் ஹிட்லர். ஆனால் ஜெர்மன் விளையாட்டு ரசிகர்களோ ஓவன்ஸை கைதட்டி ஊக்கமூட்டினர். 100 மீட்டர், 200 மீட்டர், 4x100 மீட்டர், நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் ஓவன்ஸ்க்கு தங்கம் கிடைத்தது. ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமை அவருக்கு கிட்டியது.

அப்படிப்பட்ட சாதனையைச் செய்தும் அவர் கருப்பர் என்ற ஒரே காரணத்துக்காக எந்த விளம்பர நிறுவனமும் அவரை ஒப்பந்தம் செய்ய முன் வரவில்லை. இதுபோன்ற அநீதிகளால்தான் மார்ட்டின் லூதர் கிங் போன்ற சுதந்திர வீரர்கள் அமெரிக்காவில் உதித்தனர். தனக்கு நன்றாக பேசும் திறன் உண்டு என்பதை உணர்ந்த ஓவன்ஸ் பொது நிகழ்ச்சிகளில் பேசவும், விரிவுரை வழங்கவும் தொடங்கினார். அவரது சுபாவம் பலருக்கும் பிடித்திருந்ததால் சொந்தமாக பொது உறவு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து மதம், நேர்மை, கடும் உழைப்பு ஆகிய மூன்றை பற்றியும் அவர் பேசினார். வசதி குறைந்த பகுதிகளில் வசிக்கும் இளையர்களுக்காக பல விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், ஆதரவளித்தும் ஊக்கமூட்டினார்.

1976 ஆம் ஆண்டு ஓவன்ஸ்க்கு 'Presidential Medal of Freedom' எனப்படும் தனி நபருக்கான அமெரிக்காவின் ஆக உயரிய விருதை வழங்கி கவுரவித்தார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட். பின்னாளில் புற்றுநோய் ஏற்பட்டு 1980 ஆம் ஆண்டு மார்ச் 31ந்தேதி தமது 66 ஆவது வயதில் காலமானார் ஜெசி ஓவன்ஸ். தான் காதலித்த ரூத் சாலமன் என்ற பெண்ணை மணந்து கொண்டு Gloria, Beverly, Marlene, என்ற மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தையானார் ஓவன்ஸ். அவரது மனைவியும் மகள் மார்லினும் இன்றுவரை “ஜெசி ஓவன்ஸ் பவுண்டேஷன்ஸ்” என்ற அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். தங்கள் இலக்கை அடைய விரும்பும் தகுதி நிறைந்த ஆனால் வசதி குறைந்த இளையர்களுக்கு இன்றும் நிதியுதவி வழங்குகிறது ஜெசி ஓவன்ஸ் அறக்கட்டளை.

வறுமை, நிறவெறி, இன ஒதுக்கல், என பல சமூக அநீதிகளைத்தாண்டி ஓவன்ஸால் உலகம் போற்றும் அளவுக்கு உயர்ந்து நிற்க முடிந்ததென்றால், நமக்கு தடையாக இருப்பவை எவை? கொத்தடிமையாக வாழ்ந்த ஒருவரின் பேரன் விளையாட்டு உலகில் உச்சத்தைத் தொட்டது அதிர்ஷ்டத்தாலோ, மாய மந்திரத்தாலோ, ஊக்க மருந்துகளாலோ அல்ல. பயிற்சித் தடங்களில் அவர் சிந்திய வியர்வையும், தன் தோலின் நிறம் ஒரு குறையல்ல என்ற நம்பிக்கையும், கடும் உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் உலகம் எப்போதுமே தலைவணங்கும் என்ற தைரியமும்தான் ஜெசி ஓவன்ஸ்க்கு 'ஒலிம்பிக்ஸ்' என்ற வானத்தை வசப்படுத்தியது. ஓவன்ஸைப்போல் வியர்வை சிந்தவும், விடாமுயற்சியோடு உழைக்கவும் தயங்காதோருக்கு எந்த வானமும் தயங்காமல் வசப்படும். 

To watch Biography of Jessie Owens in Tamil @ YouTube

ஜெசி ஓவன்ஸ் (Olympic Legend) - வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்க