உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் 1901-ஆம் ஆண்டு அமைதிக்கான முதல் நோபல் பரிசை வென்ற பிரெஞ்சு நாட்டவரான பிரெட்ரிக் பாஸி (Frederic Passy). அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தைத் தோற்றுவித்ததற்காக அதே ஆண்டில் ஹென்றி டுனான்டிற்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருவருமே அமைதிக்காக அடித்தளமிட்டவர்கள் என்றாலும் அவர்களின் அணுகுமுறையில் வேறுபாடு இருந்தது. உலக நாடுகளிடையே போர் ஏற்படுவது தவிர்க்க முடியாதது அத்தகைய போர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை என்ற அடிப்படையில்தான் செஞ்சிலுவை சங்கத்தைத் தொடங்கினார் ஹென்றி டுனாண்ட். ஆனால் பிரெட்ரிக் பாஸி ஒருபடி மேலே சென்று நாடுகளிடையே போர் ஏற்படுவதற்கான அடிப்படைகளை அடையாளம் கண்டு போர்களை அறவே ஒழித்து நாடுகளிடையே சமாதானம் நிலவ வழிவகை செய்ய வேண்டும் என்று விரும்பினார்.