இருபதாம் நூற்றாண்டில் உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிய ஒன்று அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய 'Cold War' எனப்படும் பனிப்போர். அந்த பனிப்போர் உருவானதற்கு அடிப்படை காரணம் ரஷ்யாவில் லெனினுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஸ்டாலினும், அவருக்கு அடுத்து வரிசையாக வந்த சர்வாதிகாரிகளும் தங்கள் படை பலத்தை அசுர வேகத்தில் பெருக்கிக்கொண்டதொடு தாங்கள் நம்பிய கம்யூனிசத்தை உலக நாடுகளில் திணிக்க முற்பட்டதுதான். ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு மற்ற நாடுகள் வேண்டுமானால் அடிபணியலாம். ஆனால் கம்யூனிசத்தை வெறுத்த அமெரிக்காவோ ரஷ்யாவின் ஆயுத குவிப்பை எதிர்கொள்ள நேரடி ஆயுத போட்டா போட்டியில் இறங்கியது. அதன் விளைவுதான் 'Cold War' எனப்படும் பனிப்போர். பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அணு ஆயுத போர் நீளுமோ? மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ? என்று உலகம் அஞ்சிய நாட்கள் ஏராளம். ஆனால் 1917-ஆம் ஆண்டு உலகுக்கு முன்னுதாரணமான ஆட்சி வழங்கும் உறுதியோடு லெனின் மூலம் ரஷ்யாவில் வேருன்றிய கம்யூனிசம் 74 ஆண்டுகளுக்குப் பிறகு 1991-ஆம் ஆண்டில் அடியோடு வேருறந்து போகும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆம் அந்த ஆண்டு சோவியத் யூனியன் சிதறுண்டது. கம்யூனிசம் சிதைந்து போனது பனிப்போரும் ஆவியாகி காற்றில் கரைந்து போனது. ஆயுத போட்டா போட்டியிலிருந்து விடுபட்ட உலகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. அதையெல்லாம் சாத்தியமாக்கியது தனி ஒரு மனிதனின் தெளிந்த பார்வையும், உள்நாட்டு பிரச்சினைகளுக்கு அடக்குமுறை மட்டுமே பதிலாகாது என்ற நம்பிக்கையும், உலகத்திற்கு தேவை பொருளாதார வளர்ச்சியே அன்றி ஆயுத வளர்ச்சி அல்ல என்ற தொலைநோக்கும்தான். பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் உலகத்தின் பாதுகாப்பை பன்மடங்கு உயர்த்தி வரலாற்றிலும் உயர்ந்து நிற்கும் அந்த வித்தியாசமான அரசியல் தலைவரின் பெயர் மிக்கைல் கொர்பசோவ் (Mikhail Gorbachev).