Biography of Sir Ernest Rutherford - சர் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு வாழ்க்கை வரலாறு

'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்' என்று திருக்குறளைப் புகழ்ந்துப் பாடினார் ஒளவையார். திருக்குறள் எவ்வுளவு சிறிய வடிவில் எவ்வுளவு பெரிய விசயங்களைச் சொல்கிறது என்பதை எடுத்துக்காட்டத்தான் அப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. மனிதனுக்குத் தெரிந்த ஆகச் சிறியப் பொருள் அணுதான். அந்த அணுவைத் துளைத்து ஏழு கடலையும் புகுத்துவதென்றால் முடியக்கூடியக் காரியமா? ஆனால் ஒருவிதத்தில் அந்த சொற்றொடரைக் கூறிய ஒளவையாரைப் பாராட்ட வேண்டும். ஏனென்றால் உலகிலேயே ஆகச்சிறியப் பொருளான அணுவைத் துளைக்க முடியாதா? என்று அவர் சிந்தித்திருக்கிறார் அப்போது வேர்விட்ட அந்த சிந்தனை பல காலத்திற்குப் பிறகு உண்மை என்று நிரூபிக்கப்பட்டது அறிவியல் உலகில். ஆம் அணுவையும் துளைக்க முடியும் என்று செய்து காட்டினார் ஒரு விஞ்ஞானி. அந்தச் சாதனையின் மூலம் உலகம் பல நன்மைகளையும் கண்டிருக்கிறது, சில தீமைகளையும் கண்டிருக்கிறது. நன்மைகளை மட்டுமே நாம் அளவுகோலாகக் கொண்டுப் பார்த்தால் எந்தக் கண்டுபிடிப்பும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். அணுவைப் பிளக்கும் கண்டுபிடிப்பு அணுகுண்டு உற்பத்திக்குத் துணையாக இருந்தது என்ற ஒன்றை ஒதுக்கி விட்டு நாம் அந்த கண்டுப் பிடிப்பாளரின் கதையைத் தெரிந்துகொள்வோம். அவர்தான் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான 'சர் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு'.



1871 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 30ந்தேதி நியூசிலாந்தின் நெல்சன் எனும் இடத்தில் பிறந்தார் ரூதர்ஃபோர்டு. பனிரெண்டு பிள்ளைகளில் நான்காமவர். அவரது குடும்பம் ஓர் எளிய விவசாய குடும்பம். குடும்பப் பண்ணையில் பெற்றோருக்கு உதவியாக இருந்த அவர் கல்வியில் சிறந்து விளங்கினார் சிறிய வயதிலேயே அவர் கடும் உழைப்பாளியாக இருந்தார். உழைப்பு இருந்த அதே இடத்தில் அவருக்கு நிறைய புத்திக் கூர்மையும் இருந்தது. விளையாட்டுக்களில் கூட ரூதர்ஃபோர்டின் புத்திக்கூர்மை பளிச்சிட்டது. அவருக்கு 11 வயதானபோது ஒரு சோதனையைச் செய்துப் பார்த்தார். பீரங்கிகள் கம்பீரமாக முழங்குவதைப் பார்த்திருந்த அவர் அதே மாதிரி சத்தம் எழுப்பக் கூடிய ஆனால் அழிவை ஏற்படுத்தாத ஒரு பொம்மை பீரங்கியைச் செய்ய விரும்பினார். 

சம வயது பையன்கள் விளையாடும் கோலிக்குண்டுகளை வைத்து சிறிய வெடி மருந்தையும் பயன்படுத்தி பொம்மைப் பீரங்கியைச் செய்தார் அதனை இயக்கி விட்டு ஒரு மரத்திற்குப் பின் ஒளிந்து கொண்டார். பெரும் சத்தத்துடன் விளையாட்டுப் பீரங்கி வெடித்து ஓய்ந்தது. மகிழ்ந்து போன ரூதர்ஃபோர்டு அதோடு நின்று விடவில்லை அந்த பீரங்கியின் வேகத்தையும் அது எழுப்பும் சத்தத்தையும் மேலும் எப்படி அதிகரிக்கலாம் என்று சிந்திக்கத் தொடங்கினார். இப்படி ஓயாமல் சிந்திக்கும் அவரது பண்புதான் பிற்காலத்தில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளைச் செய்ய அவருக்கு உறுதுணையாக இருந்தது.

கல்வியில் சிறந்து விளங்கிய ரூதர்ஃபோர்டுக்கு நெல்சன் கல்லூரி உபகாரச்சம்பளம் வழங்கியது. பின்னொரு அந்த உபகாரச் சம்பளத்தைப் பற்றி குறிப்பிட்ட ரூதர்ஃபோர்டு அது கிடைக்காமல் போயிருந்தால் தான் ஒரு விவசாயியாக போயிருக்கக்கூடும் என்று கூறினார். கல்லூரி முடிந்து நியூசிலாந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்த அவர் தனது 22 ஆவது வயதில் முதுகலைப் பட்டம் பெற்றார். பல்கலைக் கழக நாட்களில் மின் காந்த அலைகளின் சோதனையில் முகுந்த ஆர்வமும் ஈடுபாடும் காட்டினார். அந்தத் துறையில் தொடர்ந்து ஆராய்ட்சி செய்ய அவருக்கு உபகாரச் சம்பளம் வழங்கியது இங்கிலாந்தின் கேம்ஃபிரிட்ஜ் பல்கலைக்கழகம். 24 வயதில் கேம்ஃபிரிட்ஜ் வந்து சேர்ந்த ரூதர்ஃபோர்டு மின்காந்த அலைகள், மின் கதிர்வீச்சு ஆகியவற்றில் ஆராய்ட்சிகள் செய்தார். கெவெண்டிஷ் ஆராய்ட்சிக் கூடத்தில் அவர் யுரேனியம் என்ற தனிமத்தைக் கொண்டும் ஆராய்ட்சிகள் செய்தார். யுரேனியம் வெளியிடும் கதிர்வீச்சை அளக்க ஒரு புதிய கருவியை உருவாக்கினார். அந்தக் கதிர்வீச்சுகளுக்கு ஆல்பா, பீட்டா, காமா என்று பெயரிட்டார். 

To watch Biography of Sir Ernest Rutherford in Tamil @ YouTube

அணுவைத் துளைத்த விஞ்ஞானியின் கதை - ('சர் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு') 

 வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்க


ரூதர்ஃபோர்டின் ஆராய்ட்ச்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த கனடாவின் Montreal பலகலைக்கழகம் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றும்படி அவருக்கு அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று 27 ஆவது வயதில் அங்கு சென்ற ரூதர்ஃபோர்டு தனது ஆராய்ட்சிகளைத் தொடர்ந்ததோடு பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டார். ஒன்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் இங்கிலாந்து திரும்பிய ரூதர்ஃபோர்டு இந்த முறை Manchester பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக சேர்ந்தார். யுரேனியம் வெளியிடும் அணுக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததற்காக ரூதர்ஃபோர்டுக்கு 1908 ஆம் ஆண்டுக்கான இராசயனத்துறை நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்தப் பரிசு வழங்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் மிக முக்கியமான இன்னொரு கண்டுபிடிப்பைச் செய்தார் ரூதர்ஃபோர்டு. அணு என்பது ஒரு திடப்பொருளல்ல எப்படி சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றி வருகின்றனவோ அதேபோல் அணுவுக்குள் நியூக்ளியர் என்ற நடுநாயகத்தை எலக்ட்ரான்ஸ் என்பவை சுற்றி வருகின்றன என்பதுதான் அந்த உண்மை. 

அணுவின் தன்மைப் பற்றி அதுவரை அறியப்படாத உண்மை அது. முதல் உலகப்போரின்போது நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் கருவி ஒன்றை உருவாக்கித் தந்தார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புகளை கவுரவிக்கும் வகையில் 1914 ஆம் ஆண்டு ரூதர்ஃபோர்டுக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தது இங்கிலாந்து அரசு. ரூதர்ஃபோர்டுக்கு அழியாப் புகழ் கிடைத்த ஆண்டு 1919 இந்த ஆண்டில்தான் அவர் அதுவரை முடியாது என நம்ப பட்டதை செய்து காட்டினார் ஆம் அணுவை பிளந்து காட்டினார். யுரேனியத்தில் ஆல்பா துகள்களை செலுத்தினால் எதிர் விளைவுகள் சங்கிலித் தொடர்போல் ஏற்படும் என்பதை விளக்கிக் காட்டினார். அந்த உண்மைதான் பிற்காலத்தில் அணுகுண்டு தயாரிக்க அடிப்படையாக அமைந்தது. ஆனால் அவரது ஆராய்ட்ச்சிகளின் நோக்கம் அழிவுக்கான ஆயுதங்களை உற்பத்தி செய்வதல்ல. அணுசக்தியால் மனுகுலத்திற்கு நன்மைகள் ஏற்படும் என்று அவர் நம்பினார். அதே நோக்கத்துடன் கடைசி வரை உழைத்த ரூதர்ஃபோர்டு 1937 ஆம் ஆண்டு அக்டோபர் 19ந்தேதி தமது 66 ஆவது வயதில் காலமானார். அவரது அஸ்தி  Westminster Abbey யில் நியூட்டன் போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

நல்லவேளையாக ரூதர்ஃபோர்டு வாழ்ந்த காலம்வரை அணுகுண்டுகளோ, ஹைட்ரஜன் குண்டுகளோ உற்பத்தி செய்யப்படவில்லை. இல்லையெனில் எளிமையையே விரும்பிய அந்த விஞ்ஞானி மனம் நொந்து போயிருப்பார். இன்று அணுசக்தியால் உலகம் பல நன்மைகளை அனுபவித்து வருகிறது. மின் உற்பத்தி மற்றும் நெடுந்தூர கடல் பயணம் போன்றவற்றிற்கெல்லாம் அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது. இன்னும் பல ஆக்க சக்திகளுக்கு அணுசக்தியை பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துக் கொண்டே வருகின்றனர். அந்த நன்மைக்கெல்லாம் உலகம் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டுக்குதான் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. தன் வாழ்நாளில் பல பட்டங்களையும், விருதுகளையும் வாங்கிக் குவித்தார் ரூதர்ஃபோர்டு. அவரை கவுரவிக்கும் வகையில் ஸ்வீடன், ரஷ்யா, கனடா, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகள் ரூதர்ஃபோர்டின் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டிருக்கின்றன. 

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமானதொரு கண்டுபிடிப்பை நிகழ்த்த ரூதர்ஃபோர்டுக்கு உறுதுணையாக இருந்த பண்புகள் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான். அப்படி விடாமுயற்சியோடு செயல்பட்டு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதால்தான் அவர் மறைந்த பிறகும் அவரது பெயரை வரலாறு பெருமையுடன் நினைவில் வைத்திருக்கிறது. ரூதர்ஃபோர்டைப் போலவே நாமும் இந்த இரண்டு பண்புகளை தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்வில் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் போராடினால் நிச்சயமாக வரலாறும் இடம் தரும் அதன் மூலம் நாம் விரும்பும் வானமும் வசப்படும். 

To watch Biography of Sir Ernest Rutherford in Tamil @ YouTube

அணுவைத் துளைத்த விஞ்ஞானியின் கதை - ('சர் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு') 

 வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்க