Biography of Mahatma Gandhi Part 1 - மஹாத்மா காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு பாகம் - 1

உலக வரலாற்றில் வேறு எவரும் பயன்படுத்தாத இரண்டு ஆயுதங்களை இவர் பயன்படுத்தினார். பீரங்கிகளுக்கும், தோட்டாக்களுக்கும் பெயர்போன காலனித்துவ ஆட்சியியாளர்கள்கூட கடைசியில் தோற்றுப்போய் இவருக்குத் தலை வணங்கினர். அவர்தான் அகிம்சை, வாய்மை என்ற இரண்டு உன்னத பண்புகளை வாழ்ந்து காட்டிய இந்தியாவின் தேசப்பிதா அன்னல் காந்தியடிகள். உலக வரலாறு மஹாத்மா எனற பட்டத்தை வழங்கி கவுரவித்திருக்கும் ஒரே சரித்திர நாயகர். 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் எனும் மீனவ கிராமத்தில் பிறந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. 

அவரது தந்தை காபா கரம்சந்த் காந்தி 25 வயதிலேயே அமைச்சரானவர். தாயார் பெயர் புத்திலிபாய். சிறுவயதில் 'அரிச்சந்திரா' நாடகம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது காந்திக்கு. அந்தப் பிஞ்சு வயதிலேயே அரிச்சந்திரன் கதாபாத்திரம் அவரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. வாழ்நாள் முழுவதும் உண்மையையே பேச வேண்டும் என்ற எண்ணத்தையும் அவருக்குள் விதைத்தது. காந்தி தொடக்கப்பள்ளியில் பயின்றபோது ஒருமுறை சோதனை அதிகாரி வந்தார் சில சொற்களைச் சொல்லி எல்லா மாணவர்களையும் எழுதச் சொன்னார். காந்தி ஒரு வார்த்தையை தவறாக எழுதியிருந்ததைப் பார்த்து அவருடைய ஆசிரியர் காந்தியின் காலை மிதித்துப் பக்கத்து மாணவனைப் பார்த்து எழுதும்படி சைகைக் காட்டினாராம். ஆனால் ஆசிரியரே தவறான வழிகாட்டிய போதிலும் அவ்வாறு செய்ய மறுத்து விட்டாராம் காந்தி. தொடக்கப்பள்ளியில்கூட அவர் காட்டிய நேர்மை வியப்பைத் தருகிறதல்லவா!!


அந்தக்காலத்தில் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் பரவலாக இருந்ததால் 13 ஆவது வயதிலேயே காந்திக்கு திருமணம் நடைபெற்றது கஸ்தூரிபாய் என்ற பெண்ணை அவர் மணந்துகொண்டார். கல்லூரிக் கல்வி வரை இந்தியாவிலேயே முடித்த காந்தி சட்டத்துறையில் பட்டம்பெற இங்கிலாந்து செல்ல விரும்பினார். ஆனால் தன்மகன் கெட்டுப்போய் விடுவான் என்று அஞ்சிய தாயார் காந்தி வெளிநாடு செல்ல அனுமதி மறுத்தார். மது, மாது, மாமிசம் ஆகிய மூன்றையும் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்துதந்த பிறகே காந்தி இங்கிலாந்து செல்ல அனுமதித்தார் தாய். செளகரியத்திற்காக சத்தியம் செய்யும் பலரை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். ஆனால் சத்தியம் காப்பதற்காகவே பிறந்தவர் என்பதை அந்த இளம் வயதிலேயே வாழ்ந்து காட்டினார் காந்தி. தான் தாய்க்குக் கொடுத்த வாக்கை மீறாமல் ஒரு முழுமையான மனிதனாக 1891 ஆம் ஆண்டு சட்டத்துறையில் பட்டம் பெற்றார்.

மீண்டும் இந்தியா திரும்பி வழக்கறிஞர் தொழில் செய்ய வேண்டும் என்பதுதான் காந்தியின் விருப்பமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமல் போனது. ஒரு வழக்குக் காரணமாக தென்னாப்பிரிக்கா செல்ல வேண்டிய கட்டாயம் காந்திக்கு ஏற்பட்டது. 1893 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார். அந்தப் பயணம்தான் காந்தியின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. தென்னாப்பிரிக்காவில் அப்போது நிறவெறிக் கொள்கையும், இனஒதுக்கல் கொள்கையும் தலை விரித்தாடியது. அங்கு இந்தியர்கள் அவமானப்படுத்தப் படுவதையும், கொடுமைப்படுத்தப் படுவதையும் கண்டு திடுக்கிட்டுப்போன காந்தி அந்த அநீதிகளைக் கண்டு மனம் கலங்கினார். நம்மில் பெரும்பாலோர் அநீதிகளை கண்டு கலங்குவதோடு நின்று விடுவோம் ஆனால் காந்தி அதனை எதிர்க்க முற்பட்டார். தென்னாப்பிரிக்கவிலேயே தங்கி இந்தியர்களின் சம உரிமைக்காகப் போராட முடிவெடுத்தார்.

டர்பன் நகரில் நாட்டல் என்ற பகுதியில் ஒன்றல்ல இரண்டல்ல 21 ஆண்டுகள் தங்கி பல சமூக அரசியல் பரிசோதனைகளைச் செய்துப் பார்த்தார். அந்த முயற்சிகளின் மூலம் அவர் உலகுக்குத் தந்த பெரும்கொடைதான் 'சத்தியாக்கிரகம்' என்ற அகிம்சை அறவழிப் போராட்டம். தென்னாப்பிரிக்காவில் புகைவண்டியில் பயணம் செய்யும்போது ஒரு பெட்டியில் ஒரு வெள்ளையர் இருந்தாலும் அந்தப்பெட்டியில் கருப்பரோ, இந்தியரோ ஏறக்கூடாது என்ற சட்டம் இருந்தது. ஒருமுறை ஆங்கிலேயர் இருந்த ஒரு பெட்டியில் காந்தி ஏறினார். உடனடியாக இறங்குமாறு அந்த ஆங்கிலேயர் சொன்னதுக்கு மறுப்புத் தெரிவித்த காந்தியை உதைத்து வெளியில் தள்ளினார் அந்த வெள்ளைக்காரர். இந்த மாதிரி பல அவமானங்கள் ஏற்பட்டபோதும் அகிம்சை வழியில் உலகை வெல்லலாம் என்ற அவரது மன உறுதி சற்றும் குலையவில்லை. இறுதியில் காந்தியம்தான் வென்றிருக்கிறது. ஏனெனில் எந்த புகை வண்டி நிலையத்தில் அவர் உதைத்துத் தள்ளப்பட்டாரோ அதே நிலையத்தில் இன்று காந்தியடிகளுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.

To watch Mahatma Gandhi Biography Part 1 in YouTube

மஹாத்மா காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு பாகம் - 1 யூடுபில் பார்க்க 



21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்கா வாழ்க்கையை முடித்துக்கொண்டு 1915 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பிய காந்தி சபர்மதி நதிக்கரையில் ஓர் ஆசிரமம் அமைத்து அங்கு வாழத் தொடங்கினார். காந்தியை இந்திய அரசியலில் ஈடுபடுத்தினார் கோபால கிருஷ்ண கோகலே என்ற தலைவர். முதலாம் உலக்போரின்போது இந்தியாவில் செயல்பட்டு வந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு ராணுவத்திற்கு வீரர்களை சேர்க்க உதவினார் காந்தி. அதற்குக் காரணம் போர் முடிந்த பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியர்களின் சுதந்திர தாகத்தைத் தீர்த்து வைக்கும் என்று அவர் நம்பியதுதான். ஆனால் பிரிட்டிஷ் அரசோ போர் முடிந்த பிறகு ரெவ்ளட் என்ற சட்டம் மூலம் இந்தியர்களின் சுதந்திர உணர்வையும், எதிர்பார்ப்பையும் நசுக்கியது. அதனை நம்பிக்கைத் துரோகம் என்று கருதிய காந்தி வெகுண்டெழுந்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை வெளியேற்ற நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.


பிரிட்டிஷ்ப் பொருட்களை புறக்கணிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார். வரி செலுத்த மறுக்குமாறு வற்புறுத்தினார். பல உயிர்களை பலி வாங்கினாலும் ஒத்துழையாமை இயக்கம் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 1921 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்ப் பொருட்களை புறக்கணிக்கும் இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்தியின் தலைமையில் டெல்லியில் மாபெரும் தீ வளர்த்து விலையுயர்ந்த ஆடைகள் எரிக்கப்பட்டன. அதைப்பார்த்து வேதனைப்பட்ட காந்தியின் ஆங்கிலேயே நண்பர் சி.எப்.ஆண்ட்ரூஸ் அந்தத் துணிகளை எரிப்பதற்கு பதில் ஏன் அவற்றை ஏழைகளுக்கு கொடுக்கக்கூடாது? என்று கேட்டார். அதற்கு காந்தி சொன்ன பதில் ஏழைகளுக்குக்கூட தன்மானம் உண்டு. 1929 ஆம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி பூர்னஸ்வரஜ் அதாவது முழுச்சுதந்திரம் என்ற தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது. அதற்கு அடுத்த ஆண்டு சத்தியாகிரகத்தின் மாபெரும் சக்தியை உலகுக்கு உணர்த்தினார் காந்தி. அப்போது உப்புக்குகூட வரிவிதித்தது பிரிட்டிஷ் ஆட்சி வரி அதிகமில்லையென்றாலும் ஏழைகளை அது வெகுவாக பாதித்தது. எனவே அந்த வரியை எதிர்த்து புகழ்பெற்ற 'தண்டியாத்திரை' மேற்கொண்டார் காந்தி.


அகமதாபாத்திலிருந்து 78 தொண்டர்களுடன் புறப்பட்டு 24 நாட்களில் சுமார் 300 கிராமங்களை நடந்தே கடந்து தண்டி கடற்கரையை அடைந்தார். அங்கு சட்டத்தை மீறி அவர் கடற்கரையிலிருந்து சிறிதளவு உப்பைச் சேகரித்தார் முன் அறிவிப்பு செய்துவிட்டுத்தான் அவர் அந்த உப்பு சத்தியாகிரகத்தை நடத்தினார். அவருடைய மனோதிடத்தைக் கண்டு பிரிட்டிஷ் ஆட்சி சற்று தடுமாறிப் போனது உண்மைதான். இருந்தாலும் விட்டுக்கொடுக்காமல் அவரை சிறையில் அடைத்தது. அவரை மட்டுமல்ல அவருக்கு ஆதரவாக திரண்டியிருந்த சுமார் 60000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது தாங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்களுக்கு எதிராக ஒரு விரலை கூட உயர்த்தாமல் அகிம்சை காத்தனர் பலர். பிரிட்டிஷ் ஆட்சியின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச்செய்த பல சம்பவங்களுள் அந்த உப்பு சத்தியாகிரகம் மிக முக்கியமானது. இரண்டு ஆண்டுகள் கழித்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும், காந்திக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்படவே ஒத்துழையாமை இயக்கத்தை மீட்டுக்கொண்டார் காந்தி. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் லண்டனில் ஒரு வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொண்டார் ஆனால் ஏமாற்றத்தோடு திரும்பினார்.


பொருத்தது போதும் என்ற பொங்கியெழுந்த காந்தி 1942 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தைத் தொடங்கி உடனடியாக சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அன்றிரவே பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை கைது செய்தது. ஆனால் சுதந்திர வேட்கை நாடு முழுவதும் காட்டுத்தீப்போல் பரவியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபிறகு 1945 ஆம் ஆண்டு லண்டனில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதை வன்மையாக எதிர்த்து வந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் ஆட்சி பதவி இழந்தது. தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தது. தொழிற்கட்சியின் தலைவர் கிளமெண்ட் அட்லி இந்தியர்களின் சுதந்திர போராட்டத்தைக் கண்டு மனமிறங்கி இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க முடுவெடுத்தார். ஆனால் எல்லாம் கைகூடி வந்த நேரம் இந்தியாவை இரண்டாகப் பிளக்க வேண்டுமென்றப் பிரிவினைவாதக் கோரிக்கை தலையெடுத்தது. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் எங்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதால் எங்களுக்கு தனிநாடு வேண்டும் என்று வாதிட்டது முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் லீக் கட்சி.

காந்திக்கு அதில் துளிகூட சம்மதமில்லை. ஆனால் நேருவும் பட்டேலும் வேறு வழியில்லை என்று கூறினர். எனவே காந்தியை வேதனையில் மூழ்கடித்துவிட்டு பாரதத்தை இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிக்க முடிவெடுக்கப்பட்டது. பல போராட்டங்களுக்குப் பின் ஒரு வழியாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ந்தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. டெல்லி செங்கொட்டையில் பீரங்கிகள் முழங்க பல தலைவர்களும், மக்களும் அணி திரண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். தங்கள் சுதந்திர தாகம் தீர்ந்ததை எண்ணி குதூகளித்தனர். ஆனால் அந்தச் சுதந்திரத்திற்கு எவர் அடிப்படை காரணமாக விளங்கினாரோ அவர் அந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

To watch Mahatma Gandhi Biography Part 1 in YouTube

மஹாத்மா காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு  பாகம் - 1 யூடுபில் பார்க்க 


Read more: http://urssimbu.blogspot.com/2011/08/1.html#ixzz3wN6pOknK