புதிய தேசங்களை கண்டுபிடிப்பதிலும், உலகின் ஆழ அகலங்களை அலசுவதிலும் ஐரோப்பியர்களே முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை. பல நாடுகாணும் ஆர்வலர்களின் கவனம் இந்தியா பக்கமே இருந்திருக்கிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை இந்தியாவில் மட்டுமே கிடைத்த பல பொருட்களை ஐரோப்பியர்கள் அதிகமாக விரும்பினர். உதாரணத்திற்கு நவரத்தினகற்கள், மயிலிறகு, மிளகு, கிராம்பு போன்ற நறுமணப்பொருட்கள். முன்பெல்லாம் அந்தப்பொருட்கள் தரைமார்க்கமாகத்தான் ஐரோப்பாவுக்கு சென்று சேர முடிந்தது. வழியில் பல இடைத்தரகர்கள் இருந்ததாலும், தரைப்பயணம் நீண்டநெடியதாகவும் பாதுகாப்பற்றதாகவும் இருந்ததாலும் அந்தப்பொருட்களின் விலை மிக அதிமாக இருந்தது. விமானமும் கண்டுபிடிக்கப்படாத காலகட்டம் அது. ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்மார்க்கத்தைக் கண்டுபிடித்து விட்டால் வாணிபம் இன்னும் சுலபமாக இருக்கும் பொருட்களின் விலையும் நியாயமாக இருக்கும் என்பதுதான் ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கான கடல் மார்க்கத்தைக் கண்டுபிடிக்க விரும்பியதன் மிகமுக்கியமான காரணமாக இருந்தது. 1498-ஆம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்து ஐரோப்பாவின் கனவை நனவாக்கினார் ஒரு போர்ச்சுக்கீசிய நாடுகாண் ஆர்வலர். அவர்தான் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்மார்க்கத்தைக் கண்டுபிடித்து வரலாற்றில் தடம் பதித்த வாஸ்கோட காமா.