Biography of Louis Pasteur- லூயி பாஸ்ச்சர் வாழ்க்கை வரலாறு

மனித வரலாறு எழுதப்படத் தொடங்கிய காலத்திலிருந்து உலகின் ஏதாவது ஒரு மூலையில் போர்களோ, சண்டையோ நிகழாமல் இருந்த நாட்களே கிடையாது. ஆனால் போர்கள் வாங்கிய உயிர்ப்பலியைக் காட்டிலும் இயற்கை வாங்கிய உயிர்ப்பலி அதிகம் என்பதுதான் உண்மை. ஆம் போர்களில் இறந்தவர்களைக்காட்டிலும் எண்ணிலடங்கா நோய்களுக்கு பலியானவர்கள்தான் அதிகம் என்கிறது வரலாறு. இயற்கை மனுகுலும் மீது தொடுக்கும் போர்தான் நோய். எனவேதான் அந்த நோய்களை தோற்கடித்து உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களும், மருந்து கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளும் கடவுள் அந்தஸ்த்திற்கு உயர்த்தப்படுகின்றனர்.

நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகரின் மருத்துவத்துறை பங்களிப்பு மற்றவர்களைக் காட்டிலும் தலையாயது என்று வரலாற்றில் 'நூறு முக்கியமான மனிதர்கள்' என்ற நூலை எழுதியை Michael Hart கூறுகிறார். அந்த நூலில் இந்த வரலாற்று நாயகருக்கு பதினோராவது இடம் வழங்கப்பட்டுள்ளது. அம்மை, ரேபிஸ் போன்ற கொடிய நோய்களுக்கு மருந்தையும் ஆந்தரக்ஸ் நோய்க்கு தடுப்பு மருந்தையும் கண்டுபிடித்ததோடு பாலை கிருமிநீக்கம் செய்யும் முறையையும் கண்டுபிடித்தார் அவர். அவரது கண்டுபிடிப்புகளின் அடிப்படையைக் கொண்டுதான் பிந்நாளில் பல்வேறு தடுப்பூசிகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்தான் உலகப்புகழ் பெற்ற பிரெஞ்சு வேதியியல் அறிஞரும், உயிரியல் விஞ்ஞானியுமான லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur).