Biography of John Logie Baird - ஜான் லோகி பெய்ர்ட் வாழ்க்கை வரலாறு

உலகில் எந்த மூலையிலும் ஒரு சம்பவம் நிகழும்போது அதனை அப்படியே நேரடியாக உடனடியாக நம் கண்களுக்கு கொண்டு வரும் சாதனம் தொலைக்காட்சி. தத்ரூபமாகவும் மிகைப்படுத்தாமலும் காட்டக்கூடிய மகிமையும் சிறப்பும் தொலைக்காட்சிக்கு உண்டு. 1922 ஆம் ஆண்டில் வானொலி உலகுக்கு கிடைத்தபோது ஒரு பெட்டியில் குரலைக் கேட்க முடியுமா?! என்று அதிசயித்த உலகம் அடுத்த நான்கே ஆண்டுகளில் ஒரு பெட்டியில் குரலைக் கேட்பதோடு உருவங்களையும் பார்க்க முடியும் என்பதை கற்பனை செய்துகூட பார்த்திருக்காது. ஆனால் கற்பனை செய்பவர்கள்தானே கண்டுபிடிப்புகளையும் செய்கிறார்கள். ஒரு பெட்டிக்குள் ஒலியையும், ஒளியையும் காட்ட வேண்டும் என்று கற்பனை செய்து கனவு கண்டு தொலைக்காட்சி என்ற உன்னத சாதனத்தை உலகுக்குத் தந்த ஒருவரைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர் பெயர் ஜான் லோகி பெய்ர்ட். வானொலியின் தந்தை Marconi என்றால் தொலைக்காட்சியின் தந்தை பெய்ர்ட். 


1888 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 13ந்தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு அருகில் ஹெலன்ஸ்பர்க் என்ற இடத்தில் பிறந்தார் ஜான் லோகி பேர்ட். நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. அவரது தந்தை ஒரு பாதிரியார் குறைந்த வருமானத்தில் பெரிய குடும்பத்தை நிர்வகித்து வந்தார். பேர்ட் சிறுவயது முதலே ஆரோக்கியம் குன்றியிருந்தார். அதனாலோ என்னவோ அவருக்கு விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவற்றில் அதிக நாட்டம் இல்லை. வீட்டுக்கு அருகில் இருந்த தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வியைக் கற்றார் பேர்ட். பேர்ட்க்கு சிறுவயதிலிருந்தே புகைப்படங்களின் மீது அதிக ஆர்வம் இருந்தது. அந்தக்காலக் கட்டத்தில் இங்கிலாந்து பள்ளிகளில் பல இணைப்பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று புகைப்படக்கலை பேர்ட் அதில் அதிக ஆர்வம் காட்டி புகைப்படக்கலை சங்கத்தின் மாணவர் தலைவராகவும் செயல்பட்டார். அறிவுக்கூர்மையும் கைகொடுக்க பேர்ட் தனது பணிரெண்டாவது வயதிலேயே சில நண்பர்களுடன் சேர்ந்து படங்கள் காட்சிகள் பற்றியும், நகரும் காட்சிகள் பற்றியும் சோதனைகளை செய்தார்.

17 ஆம் வயதில் லண்டன் ராயல் தொழில்நுட்பக் கழகத்தில் மின்பொருளியல் துறையில் சேர்ந்து முதல் நிலையில் தேறினார். பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோதே செலினியம் செல்களைக் கொண்டு ஒளியை மின் சமிக்ஞைகளாக மாற்ற முடியும் என்று நம்பிய பேர்ட் பல்கலைக் கழகத்தில் அதற்கான ஆய்வுகள் செய்ய முடியாததால் வீட்டிலேயே ஆய்வுகளை மேற்கொண்டார். மின்சாரம் மூலம் ஒளியையும் பேசும் படத்தையும்கூட அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் எப்போதுமே இருந்தது. பட்டம் பெற்ற பிறகு ஒரு நிறுவனத்தில் உதவிப் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். 26 ஆவது வயதில் மின்னணுத்தொழிற்சாலை ஒன்றில் பணி கிடைத்தது. அவற்றிலெல்லாம் மன நிறைவடையாத பேர்ட் முற்றிலும் மாறாக காலுறை உற்பத்தி செய்யும் சொந்தத் தொழில் ஒன்றை தொடங்கினார். ஆனால் அதில் அவ்வளவு இலாபம் கிட்டவில்லை பின்னர் ரொட்டியில் தடவும் ஜாம் மற்றும் ச்சாஸ் தயாரிப்பில் இறங்கினார். உடல் ஆரோக்கியம் குன்றியதால் அந்தத் தொழிலையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. 

அந்தச் சமயத்தில் ட்ரினிடேடில் இருக்கும் தன் நண்பரை பார்க்க கப்பல் பயணம் மேற்கொண்டார் பேர்ட். அப்போது கப்பலில் வானொலி இயக்கும் ஊழியரிடம் அவருக்கு நட்பு ஏற்பட்டது. வானொலி ஒலியை ஒலிபரப்புவதுபோல் படங்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வாறு ஒலிபரப்பலாம் என்பதுபற்றி இருவரும் நிறைய விவாதித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். 1922 ஆம் ஆண்டில் தனது 34 ஆவது வயதில் லண்டன் திரும்பினார் பேர்ட். வேலையில்லாத காரணத்தால் அவர் வறுமையில் வாடினாலும் தொலைக்காட்சிப் பற்றிய கனவு மட்டும் அவரைவிட்டு நீங்கவில்லை. தொலைக்காட்சிப் பெட்டியின் செயல் முறைக்கான வரைப் படத்தை உருவாக்கி அட்டைப்பெட்டி, மின்மோட்டார், புரொஜ்க்ஸன் விளக்கு, மின் கலங்கள், நியான் விளக்கு, வானொலி வால்வுகள் போன்றவற்றை வைத்து பல வகையான ஆராய்ட்சிகளை செய்து பார்த்தார். 

To watch Biography of John Logie Baird in YouTube
ஜான் லோகி பெய்ர்ட்  வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்க



இரண்டு ஆண்டுகள் அவர் உழைத்த உழைப்புக்கு 1924 ஆண்டு பலன் கிட்டுவதுபோல் தெரிந்தது. ஒரு சிலுவையின் நிழலை பத்து மீட்டர் தூரத்திற்கு அவரால் ஒலிபரப்ப முடிந்தது. மேற்கொண்டு ஆய்வைத் தொடர அவருக்கு பொருளாதார வசதி இல்லை உண்மையில் தனது ஆய்வுக்கருவிகளின் பாகங்களை விற்று சாப்பிடும் நிலைக்குக்கூடத் தள்ளப்பட்டார் அப்படியிருந்தும் மனம் தளரவில்லை பேர்ட். எப்படியாவது மனித முகத்தையும், நகரும் காட்சியையும் ஒரு பெட்டிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முயன்றுகொண்டே இருந்தார். ஆராய்ட்சிக்கு பணமில்லாததால் உதவிகேட்டு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தார். அதில் கிடைத்த உதவியைக் கொண்டு அடுத்த ஆண்டே தொலைக்காட்சியின் ஆரம்ப மாதிரியை இயக்கிப் பார்த்தார். எந்தக் குறையுமின்றி முழுப்படமும் திரையில் துல்லியமாகத் தெரிந்தது பேர்ட் மலைத்துப்போனார். 


அந்த நாள்தான் அதாவது 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதிதான் உலகுக்கு தொலைக்காட்சி கிடைத்த நாள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் வண்ணத் தொலைக்காட்சிப் பற்றியும் ஆய்வு செய்து அதனையும் வெற்றிகரமாக உருவாக்கினார். 1929ல் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்திற்காக கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி சேவையைத் தொடங்கினார். இன்று தொலைக்காட்சி இல்லாத ஒரு உலகை நினைத்துப் பார்ப்பது சற்று சிரமம்தான். ஆனால் 85 ஆண்டுகளுக்கு முன்புவரை அது ஒரு கற்பனையாகவே இருந்தது. ஜான் லோகி பேர்ட் முயன்றதால் அந்தக் கற்பனை நிஜமானது. நமது வரவேற்பறைக்குள் உலகத்தைக் கொண்டு வர உதவிய அந்த முன்னோடி 1946 ஆம் ஆண்டு ஜூன் 14ந்தேதி தமது 58 ஆவது வயதில் காலமானார். ஜான் லோகி பேர்ட் 12 ஆவது வயதிலேயே தொலைக்காட்சிப் பற்றிய பல்வேறு சோதனைகளை செய்து பார்த்தார் என்று கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம். 

இதே வயதில் உங்கள் பிள்ளைகளும் சிறுவயதிலேயே எதாவது சோதனைகளை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்களா!! அவர்களைத் தட்டிகொடுத்து ஊக்கப்படுத்துங்கள். அவர்களைப் போன்றொர்களுக்குதான் வரலாறும் இடம்தர காத்திருக்கிறது. உடல் நலமின்மையும் வறுமையும்கூட ஜான் லோகி பேர்டின் கனவையும், தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் குலைத்து விடவில்லை. இதேபோல் நாமும் நமது வாழ்வில் கனவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியோடு முன்னேறினால் இவற்றுக்கு முன் எந்தத் தடையும் உடையும். எந்த வானமும் வசப்படும். 

To watch Biography of John Logie Baird in YouTube
ஜான் லோகி பெய்ர்ட்  வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்க