1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம். அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னாமானது ஹிரோஸிமா, மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாக கிழிந்தது நாகசாகி. ஆயிரம் ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியான அந்த செய்திகேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்து சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு உற்பத்தியாவதற்கு அடிப்படையாக இருந்தது. அறிவியல் கண்டுபிடிப்புகள் நன்மைக்காகவே பயன்பட வேண்டும் என நம்பிய அவர்தான் 20 ஆம் நூற்றாண்டின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ந்தேதி ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்ததில் பிறந்தார் ஐன்ஸ்டீன் அவர் பிறப்பிலேயே ஓர் மேதை இல்லை உண்மையில் மூன்று வயது வரை பேசாமல் இருந்ததால் அவருக்கு கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர். வகுப்பிலும் சராசரி மாணவராகத்தான் இருந்தார். ஐன்ஸ்டீனுக்கு அறிவியல் மீது ஆர்வம் பிறந்தபோது வயது 4 ஒருமுறை அவருக்கு காம்பஸ் எனப்படும் திசைகாட்டி கருவியை பரிசாக தந்தார் அவரது தந்தை. அதனுள் இருந்த காந்தம் அவரை அறிவியல் உலகை நோக்கி ஈர்த்தது.
பள்ளியில் சொந்தமாகவே கால்க்ளஸ் என்ற கணித கூறை கற்றுகொண்டார் ஐன்ஸ்டீன். பின்னர் சந்தேகங்களை கேட்க தொடங்கினார். அவரது கேள்விகளுக்கு பதில் தர முடியாம ஆசிரியர் திகைத்ததாகவும் அடுத்து என்ன கேட்கப்போகிறார் என அஞ்சியதாகவும் ஒரு வரலாற்றுகுறிப்பு கூறுகிறது. சிறு வயதிலேயிருந்து வார்த்தைகளாலும் சொற்களாலும் சிந்திப்பதைக்காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன். அவருக்கு வயலின் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. இசைமேதை மோசார்ட்டின் தீவிர ரசிகராக இருந்த அவருக்கு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்கு திறமை இருந்தது.
ஐன்ஸ்டீனுக்கு 15 வயதானபோது இத்தாலியில் மிலான் நகருக்கு குடியேறினர். அங்கு அவரது தந்தை வர்த்தகத்தில் நொடித்துபோனதும் சுவிட்சர்லாந்துக்கு சென்றார் ஐன்ஸ்டீன். புகழ்பெற்ற சுவிஸ் பெட்ரல் பாலிடெக்னிக் நுழைவுத்தேர்வில் அவர் தோலிவி அடைந்தார். ஆனால் அடுத்த ஆண்டு ஐன்ஸ்டீனை சேர்த்துகொண்டது அந்த பலதுறை தொழிற்கல்லூரி. அதிலிருந்து தேர்ச்சிபெற்றதும் சுவிஸ் குடியுரிமை பெற்றார் ஐன்ஸ்டீன். அவருக்கு கிடைத்த முதல் வேலை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை பதிவு செய்து ஆராய்வது. அந்த வேலையில் அதிக ஓய்வு நேரம் இருந்ததால் அவர் சொந்தமாக பல ஆராய்ட்சிகளை செய்ய உதவியாக இருந்தது. ஆய்வுக்கட்டுரைகளையும் அவர் எழுத தொடங்கினார்.
1905 ஆம் ஆண்டு ஸூரிக் பல்கலைகழகத்தில் ஐன்ஸ்டீனுக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. கண்ணுக்கு புலப்படாத அணுவைப் பற்றியும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப்பர்றியும் ஆராய்ந்த ஐன்ஸ்டீன் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி என்ற கோட்பாட்டை வெளியிட்டார். அதுதான் சார்பியல் கோட்பாடு அந்த கோட்பாடு மூலம் அவர் உலகுக்கு தந்த புகழ்பெற்ற கணித இயற்பியல் வாய்ப்பாடுதான். விஞ்ஞான உலகத்திற்கே இந்த வாய்ப்பாடுதான் அடிப்படை மந்திரமாக கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பை செய்தபோது ஐன்ஸ்டீனுக்கு வயது 26 தான்.
To watch Biography of Albert Einstein in YouTube
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்க
1921 ஆம் ஆண்டு ஐன்ஸ்டீனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்க விரும்பியது நோபல் குழு. ஆனால் சார்பியல் கோட்பாடு குறித்து அப்போது விஞ்ஞானிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அதற்காக அல்லாமல் ஃபோட்டோ எலெக்டிரிக் எபெக்ட் என்ற கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கபட்டது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி கலந்துகொண்டதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார் ஐன்ஸ்டீன். பின்னர் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபோது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வரும் என்று உணர்ந்த அவர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.
1939 ஆம் ஆண்டு வேறு சில இயற்பியல் வல்லுநர்களுடன் சேர்ந்து அமெரிக்கா அதிபர் ரூஸ்வெல்டுக்கு ஒரு கடிதம் எழுதினார் ஐன்ஸ்டீன். அப்போது ஹிட்லரின் ஆட்சியில் இருந்த ஜெர்மனிக்கு அணுகுண்டை தயாரிக்கும் வல்லமை இருப்பதாகவும் வெகு விரைவில் அணுகுண்டு தயாரிக்ககூடும் என்றும் கடிதத்தில் எச்சரித்திருந்தார் ஐன்ஸ்டீன். ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று. ஜெர்மனி அணுகுண்டு செய்வதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று நம்பினார் ஐன்ஸ்டீன். ஆனால் ரூஸ்வெல்ட் நிர்வாகமோ ஐன்ஸ்டீனுக்கு தெரியாமலே சொந்தமாக அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது.
அதன்விளைவுதான் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு உலக வரலாற்றை ஒருகனம் இருட்டடிப்பு செய்த நாகசாகி ஹிரோஸிமா சம்பவம். E=Mc2 என்ற மந்திரம்தான் அணுகுண்டின் அடிப்படையாக அமைந்தது. அந்த தவிப்பு இறப்பு வரை ஐன்ஸ்டீனை உறுத்தியிருக்கும். ஆனால் அந்த ஒரு கருப்பு புள்ளியைத் தவிர்த்து ஐன்ஸ்டீனின் கோட்பாட்டால் பல நன்மைகளை பெற்றிருக்கிறது உலகம். உண்மையில் சர் ஐசக் நீயூட்டனின் கண்டுபிடிப்புகள் பைபிலில் பழை ஏற்பாடு என்றால் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுகள் பைபிலின் புதிய ஏற்பாடு என ஒரு ஒப்பீடு கூறுகிறது.
தங்கள் இனத்தவர் என்ற பெருமைப்பட்ட இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கே அதிபராகும்படி ஐன்ஸ்டீனுக்கு அழைப்பு விடுத்தது. நான் அரசியலுக்கு லாயக்கில்லாதவன் என்று சொல்லி அந்த பதிவியை ஏற்க மறுத்துவிட்டார் ஐன்ஸ்டீன். சுவிட்சர்லாந்தில் படிக்கும்போது மிலவா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். இரு குழந்தைகளுக்கு தந்தையானார். பின்னர் மணமுறிவு ஏற்படவே எல்ஸா என்ற உறவு பெண்ணை மணந்து கொண்டார். எல்ஸா சிறிது காலத்திலேயே இறந்துவிட சுமார் 20 ஆண்டுகள் தனித்தே வாழ்ந்தார் ஐன்ஸ்டீன்.
அணுகுண்டு தயாரிப்பதற்கு ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுதான் என்றாலும் யுத்தங்களை அறவே வெறுத்தவர் ஐன்ஸ்டீன். உலக அமைதிக்காக குரல் கொடுத்த அவர் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ந்தேதி தனது 76 ஆவது வயதில் காலமானார். நவீன அறிவியல் ஐன்ஸ்டீனுக்கு மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கிறது. எதையுமே ஆழமாக சிந்திக்ககூடியவர் அவர். ஒருமுறை உங்களுக்கு இன்னும் எதை கண்டுபிடிப்பதில் ஆர்வம் என நண்பர் ஒருவர் கேட்க கடவுள் இந்த உலகை எப்படி படைத்தான் என்று ஒருநாள் நான் கண்டுபிடித்துவிடவேண்டும் என்று கூறினாராம் ஐன்ஸ்டீன்.
ஐன்ஸ்டீனுக்கு வானம் வசப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று ஆழமான சிந்தனை, மற்றொன்று அறியப்படாதவற்றை பற்றிய அளவிட முடியாத தாகம். அந்த ஆழமான சிந்தனையும் இயற்கையைப் பற்றிய தாகமும் நமக்கு இருந்தால் நமக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும்.
To watch Biography of Albert Einstein in YouTube
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்க