Biography of Alexander Fleming - அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் வாழ்க்கை வரலாறு

நாம் நோய்வாய்ப்பட்டால் உடனே மருத்துவரைப்பார்த்து ஆன்டிபயாடிக் எனப்படும் கிருமிக்கொல்லி மருந்தை உட்கொண்டு குணமடைகிறோம். ஆனால் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? முதலாம் உலகப்போரில் காயமடைந்த கிட்டதட்ட ஏழு மில்லியன் வீரர்கள் சரியான நோய்க்கொல்லி மருந்து இல்லாததால் மடிந்துபோனார்கள் என்பது வரலாற்று உண்மை. நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் மருத்துவமேதை கொஞ்சம் முன்னதாகவே பிறந்திருந்தால் அந்த எழு மில்லியன் வீரர்களின் உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்ககூடும். அவர் வேறு யாருமல்ல பெனிசிலின் என்ற அற்புத மருந்தை உலகிற்கு தந்ததன் மூலம் மருத்துவ உலகின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த (Alexander Fleming) அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்.


1881 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி ஸ்காட்லந்தில் லாக்ஃபில் எனும் நகரில் ஓர் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார் அலெக்ஸாண்டர்  ஃபிளெமிங். அவர் விவசாயத்தில் ஈடுபடுவார் என குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் ப்ளெமிங் விவசாயத்திலும் ஈடுபடாமல் படிப்பையும் மேற்கொள்ளாமல் ஓர் நிறுவனத்தில் சுமார் 4 ஆண்டுகள் எழுத்தராக பணி புரிந்தார். தமது 20 ஆவது வயதில் அவருக்கு கொஞ்சம் பணம் சேர்ந்ததால் லண்டனில் செயின் மேரி மருத்துவ பள்ளியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார்.  

டைபாய்டு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடித்த சர் ஆம்ராத் எட்வர்ட் ரைட் என்பவர்தான் ப்ளெமிங்கிற்கு பேராசிரியராக இருந்தார். 1906 ஆம் ஆண்டு மருத்துவத்தில் சிறப்பு தேர்ச்சிபெற்று அந்த பேராரசிரியரிடமே உதவியாளராக சேர்ந்தார் ப்ளெமிங். தனது பேராசிரியரைப்போலவே தானும் மனுகுலத்துக்கு உதவும் ஏதாவது ஒரு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கனவு அவரிடம் இருந்தது. பாக்டீரியா கிருமிகளைப்பற்றி ஆராயத்தொடங்கினார். முதல் உலகப்போரில் அவர் இராணுவ மருத்துவ குழுவில் ஒரு கேப்டனாக இருந்தபோது சரியான மருந்து இல்லாமல் மடிந்துபோன போர் வீரர்களின் நிலை அவரை சிந்திக்க வைத்தது.

அந்தக்கால கட்டத்தில் கார்பாலிக் அமிலந்தான் கிருமிக்கொல்லியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அந்த அமிலம் கிருமிகளை கொல்லும் அதே வேளையில் இரத்தத்தில் உள்ள வெள்ளை அனுக்களையும் சில சமயம் அழித்துவிடுகிறது. முதலாம் உலகப்போரில் சுமார் 7 மில்லியன் வீரர்கள் காயம்பட்டு இறந்தனர். அதன்பிறகுதான் கார்பாலிக் அமிலம் சரியான மருந்து அல்ல என்பதை ப்ளெமிங்கும் அவரது பேராசிரியரும் உலகுக்கு அறிவித்தனர். அதோடு நின்றுவிட்டால் போதுமா? சரியான மருந்தை கண்டுபிடிக்க வேண்டாமா? உலகப்போர்  முடிந்த கையோடு மீண்டும் தன் ஆராய்ட்சிக்கூடத்திற்கு திரும்பினார்  ஃபிளெமிங். கிருமிகளை கொல்லும் மருந்து வேண்டுமென்றால் முதலில் கிருமிகளின் தன்மைகளைபற்றி தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?

To Watch Biography of Alexander Fleming on YouTube

அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் வாழ்க்கை வரலாறு  யூடுபில் பார்க்க


எனவே தனக்கு கிருமி தொற்றக்கூடும் என்ற அச்சம் கொஞ்சம்கூட இல்லாமல் பலவகை கிருமிகளை வளர்த்து அவற்றின் மீது சோதனை செய்தார்  ஃபிளெமிங். 1928 ஆம் ஆண்டு லண்டனில் இலையுதிர் காலத்தில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. இரண்டுவாரம் விடுமுறைக்காக சென்றிருந்தார் ப்ளெமிங். விடுமுறைக்கு செல்லும் முன் அவர் ஓரு ஆய்வுக்கூட வட்டில் ஸ்டெபிலோ காக்கஸ் என்ற கிருமியை சேமித்து வைத்துவிட்டு சென்றார். அந்த கிருமிதான் நிம்மோனியா முதல் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் கிருமி. இரண்டு வாரம் விடுமுறை கழித்து வந்து பார்த்தபோது அந்த வட்டில் பூசனம் பூத்திருப்பதை பார்த்தார். பூதக்கண்ணாடி வைத்து பார்த்தபோது அந்த பூசனம் படர்ந்திருந்த இடங்களில் கிருமிகள் கொல்லப்பட்டிருப்பதை அவர் கண்டறிந்தார். உடனே ஒரு முக்கியமான பொருளை கண்டுபிடித்துவிட்ட உணர்வு அவருக்கு ஏற்பட்டது.

அந்த பூசனம் பெனிசிலியம் என்ற ஒருவித காளான் என்பது அவருக்கு புரிந்தது. அந்தக் காளானைக் கொண்டு பல்வேறு ஆராய்ட்சிகள் செய்தார் அதன் விளைவாக நமக்கு கிடைத்த அருமருந்துதான் பெனிசிலின். மனுகுலத்துக்கு உயிர்காக்கும் மாமருந்தை தந்த ப்ளெமிங்கை உலகம் அப்போது பாராட்டவில்லை. இருப்பினும் பெனிசிலின் அருமை உலகம் முழுவதும் பரவியது. இரண்டாம் உலகப்போரின்போது அதிக அளவில் பெனிசிலின் உற்பத்தி செய்யப்பட்டு காயமடைந்த போர் வீரர்களுக்கு பயன்படுத்தப்பட்டது. அதன் பயனாக மில்லியன் கணக்கான உயிர்கள் காக்கப்பட்டன. நோய் தொற்று அபாயம் ஏற்படுமே என்று அதுவரை அறுவை சிகிச்சை செய்ய தயங்கிய மருத்துவ உலகம் பெனிசிலின் வரவுக்கு பிறகு தைரியமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டது.

அதுவரை தீர்க்கப்படாத முடியாதவை என்று கருதப்பட்ட நோய்களுக்கு திடீரென்று சிகிச்சை அளிக்க முடியும் என்பதை மருத்துவ உலகம் கண்டுகொண்டது. பெனிசிலினுக்குப் பிறகு எத்தனையோ வேறுவித ஆன்டிபயாடிக் மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் அவை அனைத்துக்கும் அஸ்திவாரம் போட்டு தந்தது பெனிசிலின்தான். மனுகுலத்துக்கு பெனிசிலின் என்ற மாமருந்தை தந்த ஃபிளெமிங் அதனால் எந்த பொருளியல் லாபமும் அடையவில்லை அந்த மருந்துக்கு காப்புரிமை பெறச்சொல்லி எத்தனையோ நண்பர்கள் வற்புறுத்தியும் அதை அவர் செய்யவில்லை செய்திருந்தால் அவர் கோடீஸ்வரராகியிருப்பார். இருந்தாலும் அந்த உயிர்காக்கும் கண்டுபிடிப்புக்காக 1945 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை தந்து தனது நன்றியை தெரிவித்துக்கொண்டது உலகம்.

தனி ஒரு மனிதனின் விடாமுயற்சியால் கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் எண்ணிலடங்கா உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. இன்னும் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்படப்போகின்றன. உயிர் விலை மதிக்க முடியாதது என்றால் அந்த உயிரை காக்கும் எந்த கண்டுபிடிப்பும் அதைவிட விலை மதிக்க முடியாதது அல்லவா? அந்த விலைமதிக்க முடியாத மருந்தை உலகுக்கு தந்த  ஃபிளெமிங் 1955 ஆம் ஆண்டு மார்ச் 11 ந்தேதி லண்டனில் காலமானார். அடுத்தமுறை நீங்கள் ஆன்டிபயாடிக் மருந்தை உட்கொள்ளும்போது  ஃபிளெமிங்கிற்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் அவர் பொருள் சம்பாதிப்பதற்காக அந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தவில்லை.

உண்மையில் மனுகுலத்திற்கு பயனுள்ள ஒரு பொருளை தரவேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது. அந்த நோக்கம் உயரியதாக இருந்ததால் ப்ளெமிங்கிற்கு பெனிசிலினும் அதனால் வானமும் வசப்பட்டது. நமது வாழ்க்கையிலும் எண்ணமும் நோக்கம் உயரியதாக இருந்தால் நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்..!!
          
To Watch Biography of Alexander Fleming on YouTube

அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் வாழ்க்கை வரலாறு  யூடுபில் பார்க்க