கணினித்துறையில் இந்தியர்கள் சிறந்தவர்கள் என்பது பொதுவாகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மை. கணினிக்கு அடிப்படை கணிதம் என்பதால் கணிதத்திலும் இந்தியர்கள் சிறந்து விளங்குகின்றனர் என்பதில் ஆச்சரியமில்லைதான். கணித மேதை ராமானுஜம் போன்றவர்கள் அந்த துறையில் மேதைகளாக விளங்கினர். எனினும் உலகுக்கு கணிதத்தின் பல்வேறு கூறுகளை அறிந்து சொன்னவர்களும், விளக்கி கூறியவர்களும் கிரேக்கர்கள்தான் என்பது வரலாறு கூறும் உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாக்ரடீஸ், அரிஸ்டாடில், பிளேட்டோ போன்ற தலைசிறந்த தத்துவமேதைகள் மட்டுமின்றி மிகச்சிறந்த சிந்தனையாளர்களும், பகுத்தறிவாளர்களும் உதித்தனர் கிரேக்க மண்ணில். அவர்கள் விட்டு சென்ற சொத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பிறகும் மனுக்குலத்திற்கு மேன்மை தந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மிகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.அவர் தொகுத்து தந்த எலிமென்ட்ஸ் (Elements) எனப்படும் கணிதத் தொகுப்புதான் உலகின் முதல் பாடப்புத்தகம் (Text Book) என்று புகழப்படுகிறது. 'கணிதத்தின் தந்தை' என வரலாறு போற்றும் அவரது பெயர் யூக்ளிட் (Euclid).