Biography of Sigmund Freud - சிக்மண்ட் ஃப்ராய்ட் வாழ்க்கை வரலாறு

ஆரம்பம் முதலே உடல் சம்பந்தபட்ட கிட்டதட்ட எல்லா நோய்களையுமே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனுகுலத்திற்கு இருந்தது. ஆனால் மனநோயை அவ்வாறு ஏற்றுக்கொள்ள ஏனோ மனுகுலம் தயங்கியது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட மனநோயை ஒரு சமூக அவலமாகவும், கேவலமாகவும்தான் பெரும்பாலோர் கருதினர். மனநோயாளிகளை உறவினர்களாக கொண்டவர்களைத் தவிர்த்து மற்ற அனைவருமே அவர்களை தீண்டத் தகாதவர்களாகவும், ஏன் சாத்தானின் படைப்புகளாககூட பார்த்தனர், நடத்தினர். ஆனால் மனநோயும் உடல்நோயைப் போன்றதுதான் அது சிகிச்சையளிக்கக்கூடிய ஒன்றுதான் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒருவர் துணிந்து கூறினார். மேலும் நாம் காணும் கனவுகளின் பொருள் பற்றியும் பல ஆய்வுகளை செய்து அதுவரை கூறப்படாதவற்றை தைரியமாக கூறி உலகின் புருவங்களை உயர்த்தினார். அவர்தான் 'psycho analysis' என்ற உளபகுப்பாய்வு முறையை உருவாக்கித் தந்த உலகம் போற்றும் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட்.



1856-ஆம் ஆண்டு மே மாதம் 6-ஆம் நாள் ஆஸ்திரியாவின் Pribor நகரில் பிறந்தார் ஃப்ராய்ட். அவரது தந்தை ஜேக்கப் ஃப்ராய்ட் கம்பளி வியாபாரம் செய்து வந்தார். அவருடைய இரண்டாம் மனைவி Amalie-வின் முதல் குழந்தையாக பிறந்தவர்தான் சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Schlomo Freud). ஆரம்பம் முதலே ஃப்ராய்ட் அறிவுக்கூர்மை மிக்கவராக இருந்ததால் பெற்றோர் அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கினர். அவர் அமைதியாக படிக்க அவருக்கென்று தனி அறையை ஒதுக்கி கொடுத்தனர். ஃப்ராய்ட் கேட்டதெல்லாம் அவருக்கு கிடைத்தது. தொழிற்புரட்சி காரணமாக தந்தையின் சிறு துணி ஆலையால் போட்டியை சமாளிக்க முடியவில்லை. எனவே ஃப்ராய்ட் நான்கு வயதாக இருந்தபோது வியன்னாவுக்கு (Vienna) பெற்றோர்கள் குடிபெயர்ந்தனர். அங்கும் துணி வியாபாரத்தில் ஈடுபட்டார் தந்தை. அவர்கள் யூதர்களாக இருந்ததாலும், யூதர்கள் பொதுவாக எல்லாத் துறைகளிலும் சிறப்பாக செய்ததாலும் மற்ற ஆஸ்திரியர்களின் வெளிப்படையான வெறுப்புக்கு ஆளாகினர். அதனாலேயே தான் ஒரு மிகச்சிறந்த அறிஞனாக வரவேண்டும் என்ற வைராக்கியம் ஃப்ராய்டின் மனத்தில் வேர் விடத் தொடங்கியது.



ஃப்ராய்ட் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு வியன்னா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு பல துறைகளை அலசி விட்டு இறுதியில் மருத்துவத்தை தேர்ந்தெடுத்து 1881-ஆம் ஆண்டு அதில் பட்டம் பெற்றார். அவர் மருத்துவத்தை தேர்ந்தெடுத்தது நோய்களை குணப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, இயற்கையின் சில புரியாத புதிர்களுக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகதான். நரம்பியல் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அவர் சொந்தமாக மருந்தகத்தை ஆரம்பித்தார். ஆரம்பத்திலிருந்தே அவருடைய சிகிச்சை முறைக்கும், கருத்துகளுக்கும் பலத்த எதிர்ப்பு இருந்தது. ஃப்ராய்ட் வகுத்துக்கூறிய புதிய எண்ணங்களை எள்ளி நகையாடியது வியன்னா மருத்துவ கழகம். ஃப்ராய்ட் பயன்படுத்திய மனோ வசிய சிகிச்சை முறையை கடுமையாக எதிர்த்த அவருடைய முன்னால் பேராசிரியர் ஃப்ராய்டை தன் 'Cerebral Anatomy Institute' என்ற மூளைக்கூறு கழகத்திலிருந்து தடை செய்தார் அதனால் கல்வி மற்றும் ஆய்வு நடவடிக்கையிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ஃப்ராய்டுக்கு. ஆனால் மனம் தளராமல் தன் சொந்த மருத்துவத் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.  

நரம்பியல் சம்பந்தபட்ட நோய்களுக்கும், மன நோய்க்கும் வித்தியாசமான அனுகுமுறையைப் பயன்படுத்தி சிகிச்சைகளைத் தொடர்ந்தார். மனநோய் என்பது மூளையை பாதிக்கக்கூடிய நோய் எனவே நோயாளியின் மனோபாவங்களையும் வரலாற்றையும் கேட்டறிந்து அவர்களின் ஆழ்மனத்தில் பதிந்துள்ள குறைகளை அறிந்து களைய வேண்டும். அவ்வாறு செய்யாதவரையில் எந்த மருந்தாலும் மனநோயை குணப்படுத்த முடியாது என்று முதன் முதலில் கண்டு சொன்னவர் ஃப்ராய்ட்தான். அவ்வாறு அவர் வகுத்துத் தந்த சிகிச்சை முறைதான் 'psycho analysis' என்று அழைக்கப்படுகிறது. மருத்துவ வல்லுநர்கள் அவரது சிகிச்சை முறைகளை ஒதுக்கினாலும் நோயாளிகளுடையே அவர் பிரபலம் அடையத் தொடங்கினார். வெகு விரைவில் பல மனநோயாளிகள் அவரிடம் கொண்டு வரப்பட்டனர். அந்த நோயாளிகளுக்கு அதுவரை வழங்கப்படாத சிகிச்சை முறைகளை அவர் கையாண்ட போது ஏற்பட்ட அனுபவங்களும், அவர் செய்த பரிசோதனைகளும்தான் புகழ்பெற்ற கோட்பாடுகளை வகுக்க அவருக்குத் துணை புரிந்தன. 
To watch Biography of  Sigmund Freud  in Tamil @ YouTube

சிக்மண்ட் ஃப்ராய்ட் வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்க



பத்து வருட பரிசோதனைகளுக்குப் பிறகு ஹிஸ்டீரியா (Hysteria) எனப்படும் இசிவு நோய் பற்றிய தனது முதலாவது நூலை வெளியிட்டார். மருத்துவ உளவியலில் அது ஒரு மைல்கல்லாக அமைந்தது. தனது ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக அவர் மனித மனத்தின் தன்மை பற்றி நிறைய சிந்தித்தார் அப்போதுதான் கனவுகளின் பக்கம் அவரின் கவனம் திரும்பியது கனவுகளுக்கும், ஆழ்மனத்திற்கும், நரம்பியல் நோய்களுக்கும் தொடர்பு உண்டு என்று நம்பிய ஃப்ராய்ட் தான் தினசரி கண்ட கனவுகளை எழுதி வைத்து அவற்றை ஆராயத் தொடங்கினார். 1900-ஆம் ஆண்டில்  'The Interpretation of Dreams' என்ற கனவுகளின் விளக்கம் பற்றிய நூலை வெளியிட்டார். அந்த நூலில் அவர் ஆழ்மன செயற்பாடுகள் எப்படி கனவுகளின் உள்ளடக்கத்தைப் பாதிக்கின்றன என்று விளக்கியிருந்தார். அதோடு வாய் தவறி வார்த்தைகளைச் சொல்வது, பெயர்களை மறந்துபோவது, தானே விபத்துக்குள்ளாவது போன்றவற்றுக்கும் ஆழ்மனத்திற்கும் தொடர்பு உண்டு என்று அவர் விளக்கினார். அவரது கருத்துகளும், நூலும் அவருக்கு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன. 

மனநோய் அல்லது நரம்பு கோளாறுகளை உருவாக்குவதில் அடக்கி ஒடுக்கப்பட்ட பாலுணர்ச்சி பெரும்பங்காற்றுகிறது எனும் கொள்கையை வலியுறுத்தினார் ஃப்ராய்ட். பாலுணர்ச்சியும், சிற்றின்ப வேட்கையும் பதின்ம பருவத்தில் அல்ல குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே தோன்றி விடுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த கருத்துகள் இன்னும் விவாதத்திற்குரியதாக இருந்தாலும் அவருக்கு உளவியல் உலகில் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. மேலும் Super ego, Ego, Id ஆகிய மூன்று ஆதிக்கங்கள் மனத்தை இயக்குகின்றன என்றும், அவற்றை மூளையின் மூன்று பிரிவுகளாக கொள்ளலாம் என்றும் ஃப்ராய்ட் கூறினார். வாழ்க்கையில் நடக்கும் கொடூரமான நிகழ்ச்சிகள், பழிவாங்கும் எண்ணங்கள் ஆகியவை Id-இல் பதிவாகின்றன.  Super ego, Ego ஆகியவற்றின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் போது மனிதன் சராசரியாக வாழ்கிறான். Id-இன் ஆதிக்கம் மேலோங்கும் போது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி தன்னையறியாமல் தாக்கத் தொடங்கி விடுகிறான். அதனால் நோயாளியின் சரித்திரத்தைத் தெரிந்து கொண்டு Id-இல் பதிந்த கொடூர நிகழ்ச்சிகளை தத்துவ முறையில் அழித்து விட்டால் மனநோயை குணப்படுத்தி விடமுடியும் என்பதுதான் ஃப்ராய்டின் தத்துவம்.
  


பின்னாளில் ஃப்ராய்டுக்கு தாடை எலும்பில் புற்றுநோய் ஏற்பட்டு முப்பது அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ள வேண்டியிருந்தது. அந்த நோய் தந்த வேதனைகளுக்கிடையிலும் அவர் கடுமையாக உழைத்தார். அந்தக்கால கட்டத்தில் ஹிட்லரின் நாசிப் படைகள் ஆஸ்திரியாவுக்குள் நுழைந்தன. அப்போது 82 வயதை எட்டியிருந்த நிலையிலும் ஃப்ராய்ட் ஒரு யூதராக இருந்ததால் நாட்டை விட்டு வெளியேறிடுமாறு நண்பர்கள் வற்புறுத்தியதைத் தொடர்ந்து தன் மனைவி, மகளுடன் லண்டனுக்கு குடிபெயர்ந்தார். 15 மாதங்களுக்கு பிறகு 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் நாள் தமது 83-ஆவது அகவையில் அவர் காலமானார். 

மனம் என்பது புரியாத புதிராக இருந்த காலகட்டத்தில் அந்த புரியாத மனக் கதவினை திறந்ததால்தான் 'உளவியலின் தந்தை' என்று போற்றப்படுகிறார் ஃப்ராய்ட். வரலாற்றில் பல முன்னோடிகளைப் போலவே அவரையும், அவரது கண்டுபிடிப்புகளையும் உலகம் உதாசீணப்படுத்ததான் செய்தது. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான் 'உளவியல்' என்ற வானத்தை வசப்படுத்த ஃப்ராய்டுக்கு உதவியிருக்கின்றன. அதே தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நாம் விரும்பும் வானத்தை வசப்படுத்த நமக்கும் துணை புரியும். 
To watch Biography of  Sigmund Freud  in Tamil @ YouTube

சிக்மண்ட் ஃப்ராய்ட் வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்க