Biography of John F.Kennedy - ஜான் எஃப் கென்னடி வாழ்க்கை வரலாறு

1962-ஆம் ஆண்டு உலகம் அணு ஆயுதப் போரின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அமெரிக்காவுக்கும், அப்போதைய சோவியத் யூனியனுக்கும் இடையே பெருத்தப் பலப்பரீட்சையாக உருவெடுத்திருந்தது 'கியூபா' நிலவரம். கியூபாவில் இரகசியமாக அணு ஆயுதங்களை நிலை நாட்டி அமெரிக்கா மீது அதனை பயன்படுத்த எத்தனித்திருந்தது சோவியத் யூனியன். அமெரிக்கா ஆகாய உளவுப்படை அதனை அறிந்ததும் கியூபாவை சுற்றி கடற்படை முற்றுகையை மேற்கொண்டது. எந்த நேரத்திலும் போர் வெடித்து உலகம் அழியக்கூடும் என்று அனைவரும் அஞ்சினர். ஆனால் அந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் நாள் தன் ஆயுதங்களை அகற்றி கியூபாவிலிருந்து வெளியேற ஒப்புக்கொண்டது சோவியத் யூனியன். அமெரிக்காவும் தனது முற்றுகையை அகற்ற போர் மேகம் தனிந்து உலகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. ஒரு துளி இரத்தம்கூட சிந்தமால் ஒரு மாபெரும் அணு ஆயுத போர் தவிர்க்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணம் தனி ஒரு மனிதனின் தைரியமும், தொலைநோக்கும், உன்னதமான தலமையத்துவப் பண்பும்தான். அவர்தான் அமெரிக்க வரலாற்றிலேயே ஆக இளைய வயதில் அதிபர் ஆனவரும், ஆக இளைய வயதில் மரணத்தைத் தழுவியவருமான ஜான் எஃப். கென்னடி (John F Kennedy).




அமெரிக்காவின் 35-ஆவது அதிபராக பணியாற்றிய அவரை சுருக்கமாக 'JFK' என்று அழைக்கிறது வரலாறு. ஜான் ஃபிட்ஸ் ஜெரால்ட் கென்னடி (John Fitzgerald Kennedy) 1917-ஆம் ஆண்டு மே 29-ஆம் நாள் பாஸ்டன் நகரின் புரூக்லின் (Brookline) என்ற பகுதியில் பிறந்தார். ஒன்பது பிள்ளைகளில் இரண்டாமவர். அவருடைய தாத்தா பத்தொண்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட உருளைக் கிழங்கு பஞ்சத்தை விட்டு அயர்லாந்திருந்து வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர். தந்தை ஜோசப் கென்னடி ஒரு தொழிலதிபர். ஜான் எஃப் கென்னடியின் பிள்ளைப்பருவம் மகிழ்ச்சியானதாக அமைந்தது. 1940-ஆம் ஆண்டு ஹார்வர்ட் (Harvard College) பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற கென்னடி அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக சேர்ந்தார். 1943-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. கென்னடியின் பொருப்பிலிருந்த கடற்படைப் படகை ஜப்பானியப் போர்க்கப்பல் தாக்கி மூழ்கடித்தது. அவர் கடுமையாக காயமடைந்தாலும் ஆபத்தான கடற்பகுதியில் நீந்தி துணிகரமான முறையில் செயல்பட்டு தனக்கு கீழ் இருந்த வீரர்களைக் காப்பாற்றினார்.

காயமடைந்த வீரர் ஒருவரை அவர் சுமார் மூன்று மைல் தூரம் கடலில் இழுத்து வந்து கரை சேர்த்தார். அந்த துணிகர செயலுக்காக அவருக்கு 'Purple Heart' என்ற போர் வீரப்பதக்கம் வழங்கப்பட்டது. போர் முடிந்து வந்ததும் அரசியலில் ஈடுபட்டார் கென்னடி. அமெரிக்க மக்களவையில் டெமேக்ராட்டிக் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1953-ஆம் ஆண்டு Jacqueline Kennedy என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தன. திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு முதுகுதண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார் கென்னடி. நீண்ட நாட்கள் குணமடைந்து வந்த போது அவர் 'Profiles in Courage' என்ற நூலை எழுதினார். அந்த நூலுக்காக அவருக்கு 1957-ஆம் ஆண்டுக்கான 'Pulitzer Prize' வழங்கப்பட்டது.

To watch Biography of John F Kennedy  in YouTube

ஜான் எஃப் கென்னடி - வரலாற்று நாயகர்! யூடுபில் பார்க்க







1960-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் 'Republican' பிரிவு வேட்பாளரான ரிச்சர்ட் நிக்ஸனை (Richard Nixon) குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து அமெரிக்காவின் 35-ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கென்னடி. அமெரிக்காவின் முதல் ரோமன் கத்தோலிக்க அதிபரும் அவர்தான் அப்போது அவருக்கு வயது 43. அதிபரான பிறகு அவர் ஆற்றிய முதல் உரையே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. 1961-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் நாள் அவர் கூறிய வரிகள்தான் இன்றளவும் நாட்டுப்பற்றுக்கு உதாரணமாக கூறப்படுகிறது. "நாடு உனக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்காதே, நீ நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்று கேள்" என்று முழங்கினார் ஜான் எஃப் கென்னடி.

அதிபரான பிறகு அவர் மேற்கொண்ட பொருளியல் நடவடிக்கைகளால் இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய ஆக அதிகமான பொருளியல் வளப்பத்தை அமெரிக்க சந்தித்தது. ஏழ்மையைப் போக்க அவர் அதிரடி நடிவடிக்கைக்குத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் போனது. கென்னடி அதிக அக்கறைக் காட்டிய இன்னொரு துறை அனைவருக்கும் குறிப்பாக கருப்பினத்தவருக்கு சம உரிமை வழங்கும் சட்டதிட்டங்கள். அவர் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குள்தான் 'கியூபா' பிரச்சினை தலையெடுத்தது. அதனை லாவகமாக கையாண்டு போரை தவிர்த்ததோடு மட்டுமல்லாமல் சோவியத் யூனியனுடான உறவு மேம்படவும் வழிவகுத்தார் கென்னடி. மிக முக்கியமாக அவரது தலமையின் கீழ் 1963-ஆம் ஆண்டு இரு நாடுகளும், பிரிட்டனும் அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.



நாட்டுக்காக நல்ல காரியங்களில் கவனம் செலுத்திய அவருக்கு எதிரான சில  தீய சக்திகள் உருவெடுத்தன. கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கு எதிராக இருந்த அவரை கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்று கூறும் முழுப்பக்க விளம்பரம் ஒன்று 'Texas' நியூஸ் பத்திரிகையில் வெளியானது 1963-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் நாள். அதைப் பார்த்து சிரித்த கென்னடி தன் மனைவியைப் பார்த்து நம் நாட்டில் முட்டாள்கள் இல்லாமல் இல்லை என்று தலையாட்டிக் கொண்டே கூறினாராம். அதே தினம் அவர் Texas-க்கு விமான மூலம் சென்றார். அறியாமை என்பது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து அவர் ஒரு நிகழ்ச்சியில் பேச இருந்தார். அந்த இடத்தை நோக்கி ஒரு திறந்தவெளி வாகனத்தில் தன் மனைவியுடன் அவர் பவனி வந்தார். மக்கள் சாலையோரம் நின்று ஆராவாரத்துடன் அவரை வரவேற்றனர். சற்றும் எதிர்பாராத அந்த நேரத்தில் திடீரென்று ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு குண்டுகள் அதிபரின் உடலை துளைத்தன. அந்தக்கணமே மனைவியின் மடியில் தலை சாய்ந்து உயிர் நீத்தார் ஜான் எஃப் கென்னடி.

அன்று காலை யாரை முட்டாள்கள் என்று அதிபர் வருணித்தாரோ அவர்களில் ஒருவன்தான் அதிபரை சுட்டுக் கொன்றவன். ஒரு மாபெரும் தலைவனை இழந்து அமெரிக்க தேசம் அழுதது போரை வென்றதற்காக அல்ல போரை தவிர்த்ததற்காக நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்பட்டவர் கென்னடி. அவர் அதிபர் பொறுப்பில் இருந்தது மொத்தம் இரண்டு ஆண்டுகள் பத்து மாதங்கள் இரண்டு நாட்கள். அந்தக் குறுகிய காலத்திற்குள் அவர் அமெரிக்கர்களுக்கு சுய கெளரவம், தைரியம், பெருமிதம் ஆகியவற்றை பெற்றுத் தந்தார். அவர் இறந்தபோது அவருக்கு வயது நாற்பத்தி ஆறுதான். ஒரு தவனைகூட முழுமையாக அதிபராக இல்லாமல் போனது அவருக்கு அல்ல அமெரிக்காவுக்குதான் பேரிழப்பு. அமெரிக்காவின் முன்னேற்றத்திற்காக கென்னடி தீட்டியிருந்த உயரிய திட்டங்களை அவருக்குப் பின் அதிபரான லிண்டன் ஜான்சன் நிறைவேற்றினார்.



அமெரிக்கா அதிபர்கள் வரலாற்றில் பலர் முத்திரை பதித்திருந்தாலும் ஒரு சிலரைத்தான் அமெரிக்கர்கள் இன்றும் அன்போடு நினைவு கூறுகின்றனர். அவர்களில் முக்கியமானவர் ஜான் எஃப் கென்னடி. ஆக இளைய வயதிலும் அமெரிக்காவின் மற்றும் உலகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய முடிவுகளை எடுக்க அவருக்கு உறுதுணையாக இருந்த பண்புகள் தொலைநோக்கு, தெளிந்த சிந்தனை, காரியத் துணிவு, மனசாட்சியைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாத தைரியம், உலக அமைதியே நிரந்தரம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவைதான். அந்தப் பண்புகளில் சிலவற்றை நாம் பின்பற்றினால்கூட நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.
To watch Biography of John F Kennedy  in YouTube

ஜான் எஃப் கென்னடி - வரலாற்று நாயகர்! யூடுபில் பார்க்க