Biography of Nelson Mandela - நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு

உலக வரலாற்றில் சுதந்திர போராட்டம் என்பதை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று சமஉரிமைக்காகவும், சமத்துவத்திற்க்காகவும் வேண்டி மேற்கொள்ளப்படும் சுதந்திர போராட்டம். மற்றொன்று அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டு சொந்த ஆட்சி அமைக்க வேண்டி மேற்கொள்ளப்படும் சுதந்திர போராட்டம். இந்த இரண்டு வகை சுதந்திரத்திற்க்காகவும் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து போராடியவர்கள் ஏராளம். அவர்களில் மூவரின் பெயர்களை இருபதாம் நுற்றாண்டு வரலாறு பொன் எழுத்துகளால் பொறித்து வைத்திருக்கிறது. ஒருவர் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை ஒழித்து இந்திய மண் சுதந்திர காற்றை சுவாசிக்க வழி வகுத்து தந்த அண்ணல் காந்தியடிகள். அடுத்தவர் அமெரிக்காவில் நிறவெறி ஒழிய தன் உயிரை பரிசாக தந்த மார்ட்டின் லூதர் கிங். அந்த இருவரையுமே ஏற்கனவே நமது வரலாற்று நாயகர்கள் தொடரில் சந்தித்துவிட்டோம். அவர்கள் இருவருக்குமே துப்பாக்கி குண்டுகளைத்தான் உலகம் பரிசாக தந்தது. 


இருபதாம் நூற்றாண்டு வரலாறு நினைவில் வைத்திருக்கும் மூன்றாமவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். அவரை வாழும் காந்தி என்றுகூட சிலர் வருணிக்கின்றனர். அவர்தான் நவீன இருபதாம் நூற்றாண்டில்கூட இன ஒதுக்கல் என்ற அசிங்கத்தால் இருண்டு போயிருந்த தென்னாப்பிரிக்காவில் விடிவெள்ளியாக உதித்து அந்த மண்ணின் மைந்தர்களான கருப்பினத்தவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஒப்பற்ற தலைவர் நெல்சன் மண்டேலா (Nelson Mandela). தன் கொள்கைக்காக 27-ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் ஒரு தேசத்தின் அதிபரான கதைதான் நெல்சன் மண்டேலாவின் கதை. 1918-ஆம் ஆண்டு ஜுலை 18-ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் Transkei என்ற பகுதியில் தெம்பு (Thembu) இனத்தலைவருக்கு மகனாக பிறந்தார் நெல்சன் மண்டேலா. ஆரம்பம் முதலே அவரது வாழ்க்கை முட்புதர்கள் நிறைந்த ஒன்றாகத்தான் இருந்தது.  

சொந்த மண்ணில் தம் மக்கள் அடிமைப்படுத்தப்படுவதையும், கேவலமாக நடத்தப்படுவதையும் பார்த்து சிறுபான்மை வெள்ளையினத்தவரின் ஆதிக்கத்தைத் தகர்க்க வேண்டும் என்ற உணர்வு அவருக்கு சிறுவயதிலிருந்தே மனத்தில் பதிந்தது. Fort Hare-பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது ஒருமுறை மாணவர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக அவர் அந்தக்கல்வி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் நெல்சன் மண்டேலா கல்வியை கைவிடவில்லை. Witwatersrand-என்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் Walter Sisulu என்ற நண்பருடன் இணைந்து தென்னாப்பிரிக்காவின் கருப்பின முதல் சட்ட நிறுவனத்தைத் தொடங்கினார். நெல்சன் மண்டேலா பிறந்தபோது தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் அதன் உச்சத்தில் இருந்தது. தொன்று தொட்டு கருப்பர்கள்தான் தென்னாப்பிரிக்கா மண்ணுக்கு சொந்தக்காரர்கள். 

// To watch Biography of  Nelson Mandela in YouTube

நெல்சன் மண்டேலா - வரலாற்று நாயகர்! யூடுபில் பார்க்க //

பதினேழாம் நூற்றாண்டில் அங்கு வந்து குடியேறிய பிரெஞ்சு டச்சு நாட்டவர்களையும், ஆங்கிலேயர்களையும் வரவேற்றது தென்னாப்பிரிக்க மண். எண்ணிக்கை பெருக பெருக அதிகாரத்தைக் கைப்பற்றி கருப்பினத்தவர்களை கொத்தடிமைகளாக நடத்த எத்தனித்தனர் விருந்தினர்களாக வந்த வெள்ளையர்கள். தென்னாப்பிரிக்காவின் மக்கள் தொகையில் என்பது விழுக்காட்டினராக இருந்த கருப்பர்களுக்கு வெள்ளையர்கள் ஒதுக்கிக் கொடுத்த நிலப்பரப்பு எவ்வுளவு தெரியுமா? வெறும் பதின்மூன்று விழுக்காடுதான். வெள்ளையர்களுக்கென்று தனி பள்ளிக்கூடங்கள், நூலகங்கள், மருத்துவமணைகள், பூங்காக்கள், கட்டடங்கள். அங்கே கருப்பர்களுக்கு அனுமதி கிடையாது. வெள்ளையர்கள் வாழும் பகுதியில் நடப்பதற்குகூட கருப்பினத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

இப்படிப்பட்ட கொடுமைகளை எதிர்த்து என்பது விழுக்காட்டினர் மக்களால் போராடியிருக்க முடியாதா? என்று நீங்கள் கேட்கலாம். வெள்ளையர்கள் புத்திசாலிகள் அவர்கள் மொழிகளின் பெயரால் கருப்பர்களை பிரித்து வைத்திருந்தனர். ஆனால் வெள்ளையின ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வந்தது ANC எனப்படும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ். அப்போது கல்லூரி மாணவராக இருந்த நெல்சன் மண்டேலா காங்கிரசின் இளையர் பிரிவைத் தொடங்கினார். மண்டேலாவின் வருகைக்குப்பிறகு இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. 1960-ஆம் ஆண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய கருப்பினத்தவரின் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர். இருபதாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். கொதித்தெழுந்த மக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவே ஆப்பிரிக்க தேசிய காங்கிரசை தடை செய்தது தென்னாப்பிரிக்க அரசு.


இனி அகிம்சை வழி பலன் தராது என்று நம்பிய மண்டேலாவும், அவரது நண்பர்களும் ஆயுதம் ஏந்த முடிவெடுத்து ரகசியமாக நாட்டை விட்டு வெளியேறினர். 1962-ஆம் ஆண்டு நாடு திரும்பிய அவரை கைது செய்தது தென்னாப்பிரிக்க அரசு. ஆவணங்கள் இன்றி நாட்டை விட்டு வெளியேறினார் என்றும், அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்றும் கூறி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஒரு தீவுச்சிறையில் அடைத்தது தென்னாப்பிரிக்க அரசு அந்த ஆண்டு 1964. அடுத்த 27-ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார் மண்டேலா. இனி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால் விடுதலை செய்வதாக 1973-ஆம் ஆண்டு மற்றும் 1983-ஆம் ஆண்டிலும் தென்னாப்பிரிக்க அதிபர் கேட்டுக்கொண்டும் அதனை ஏற்க மறுத்து விட்டார் மண்டேலா. அவரது மன உறுதி கருப்பினத்தவர்களை ஒன்றுபட ஊக்கமூட்டியது. நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. 

மண்டேலாவை விடுவிக்க கோரி உலக நாடுகளும் தென்னாப்பிரிக்காவை நெருக்கத் தொடங்கின பணிய மறுக்கவே தென்னாப்பிரிக்காவின் மீது கடுமையான பொருளியல் தடைகளை விதித்தன உலக நாடுகள். உலகமே போர்க்கொடி தூக்கிய பிறகு தமது அட்டுழியங்களை உணர்ந்தது வெள்ளையின சமூகம். 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் அப்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் F.W.de Klerk நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்தார். புன்னகையோடு வெளி வந்த அவரை உலகம் அதிசயமாக பார்த்தது. தமது வாழ்க்கையின் கால் நூற்றாண்டை நான்கு சுவருக்குள் கழித்த அவரிடம் எந்தவித காழ்ப்புணர்ச்சியோ, வெறுப்புணர்ச்சியோ அறவே இல்லை. அவரது விடுதலைக்குப் பிறகு இன ஒதுக்கல் சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. 

1994-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்று தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபரானார் நெல்சன் மண்டேலா. அவ்வுளவு கொடுமைகளுக்குப்பிறகு அதிபரான அவர் என்ன சொன்னார் தெரியுமா? தமது மக்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்......


'நம்மை ஒடுக்கியவர்களைப் பார்த்து நாமெல்லாம் தென்னாப்பிரிக்கர்கள் பழைய ரணங்களை மறந்து ஒன்றாக இணைந்து புதிய தென்னாப்பிரிக்காவை உருவாக்குவோம், எல்லா கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் நட்பு கரத்தை நீட்டுகிறேன் இந்த நாட்டை மறுநிர்மாணம் செய்ய உதவுமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்'. 

இப்படிப்பட்ட உன்னத தலைவர் வாழும் காலத்திலேயே வாழ நாமெல்லாம் பேறு பெற்றவர்கள். தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் என்ற அரக்கன் ஒழிய பாடுபட்ட அவருக்கும், அதிபர்  F. W. de Klerk அவர்களுக்கும் 1993-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு அவராகவே அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். பல்லாண்டுகள் தனது மக்கள் பட்ட கொடுமைகளையும், 27-ஆண்டுகள் தாம் அனுபவித்த வேதனைகளையும் நினைத்து அதிகாரம் தன் கையில் வந்தவுடன் நெல்சன் மண்டேலா வெள்ளையினத்தவரை பழி வாங்க புறப்பட்டிருந்தாலும் நாம் அதற்கு நியாயம் கற்பித்திருக்கலாம். சராசரி மனிதர்களின் இயல்பு அது. ஆனால் சராசரி மனிதனிலிருந்து அவர் உயர்ந்து நிற்கிறார் அதற்கு காரணம் இந்த பாடல் வரிகள்....

"மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோயிலப்பா....  
இதை மறந்தவன் வாழ்வு தடம் தெரியாமல் மறைந்தே போகுமப்பா"....

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை நமக்கு பல பாடங்களை தந்தாலும் ஒரு பாடம் உயர்ந்து நிற்கிறது. அதுதான் மன்னிப்பு எனும் பாடம். தவறு செய்யும்போது மன்னிப்பு கேட்போருக்கும், தவறு செய்தவர்களை மன்னிக்கத் தெரிந்தோருக்கும் நிச்சயம் எந்த வானமும் வசப்படும். 


To watch Biography of  Nelson Mandela in YouTube

நெல்சன் மண்டேலா - வரலாற்று நாயகர்! யூடுபில் பார்க்க