Biography of Rabindranath Tagore - இரவீந்தரநாத் தாகூர் வாழ்க்கை வரலாறு

உலகத்தரம் வாய்ந்த அமர இலக்கியங்களை ஒவ்வொரு மொழியும் பல்வேறு காலகட்டங்களில் தந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த இலக்கியங்களை உலகம் முழுவதும் படித்து ரசிக்க வேண்டுமென்றால் அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவற்றை அந்தந்த மொழி பேசுபவர்களே ரசிக்க முடியும். தாய் மொழியில் எழுதப்படும் ஓர் இலக்கியம் ஆங்கிலத்திற்கோ அல்லது வேறொரு மொழிக்கோ மொழி பெயர்க்கப்படும்போது அதன் இயற்கை சுவையும், வீரியமும் குறைந்து விடும் என்பது ஓரளவுக்கு உண்மைதான். அப்படிப்பட்ட நிலையிலும் ஆங்கில உலகத்தை கவரும் ஓர் வேற்று மொழி படைப்புதான் பிரசித்திப் பெற்ற நோபல் பரிசுக்குத் தகுதி பெறுகிறது. இந்திய இலக்கியத்தை பொறுத்தமட்டில் இதுவரை ஒரே ஒரு இலக்கியத்திற்குதான் அந்த கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது. வங்காள மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கப்பட்ட அந்த படைப்பு கீதாஞ்சலி. அதனைத் தந்து இந்திய இலக்கிய உலகிற்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்த உன்னத கவிஞர் இரவீந்திரநாத் தாகூருக்கு வானம் வசப்பட்ட கதையைத் தெரிந்துகொள்வோம்.



1861-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் நாள் கல்கத்தாவில் உள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார் தாகூர். குடும்பத்தில் பதினான்காவது பிள்ளை அவர். பெற்றோர் வசதி மிக்கவர் என்பதால் அனைவரும் செல்வ செழிப்பில் வளர்ந்தனர். இளம் பருவத்திலிருந்தே இலக்கியம், இசை, சமயம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டினார் தாகூர். வேதங்களையும் உபநிடதங்களையும் ஆர்வத்துடன் கற்றார். மொழியாற்றல் அவருக்கு இயற்கையாகவே இருந்தது. எனவே பனிரெண்டாவது வயதிலேயே கவிதைகள் புனையத் தொடங்கினார். தாகூரின் குடும்பம் வெளியிட்டு வந்த பாரதி என்ற பத்திரிகையில் அவரது ஆரம்பகால படைப்புகள் இடம்பெற்றன. கவிதைகள் எழுதிய அதே நேரத்தில் வங்காள நாட்டுப்புறப் பாடல்களை பாரம்பரிய இசையோடு கலந்து இசைத்தொகுப்பாகவும் வெளியிட்டார். பிற்காலத்தில் அது 'இரவீந்தர சங்கீதம்' என்று அழைக்கப்பட்டது.

தாகூர் முறையாக பள்ளி செல்லவில்லை அதற்கு காரணம் பள்ளிக்கூடத்தின் கட்டுப்பாடுகளிலும், சட்ட திட்டங்களிலும் அவருக்கு உடன்பாடு கிடையாது என்பதுதான். கல்வியாக இருந்தாலும் சரி, கவிதையாக இருந்தாலும் சரி, இசையாக இருந்தாலும் சரி எதிலுமே சுதந்திரத்தை விரும்பியவர் அவர். பள்ளிக்கு செல்லாவிட்டாலும் சமஸ்கிருதம், வங்காளம், ஆங்கிலம் ஆகியவற்றில் வல்லவராக இருந்தார். தனிமையையும் கவிதையையும் விரும்பிப் போற்றிய தாகூர் தனது மிகச்சிறந்த படைப்புகளை தனிமையின் இனிமையில்தான் எழுதினார். அவரது இலக்கிய பணி சுமார் அறுபது ஆண்டுகள் நீடித்தது. அந்தக்கால கட்டத்தில் அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், இருபத்தைந்து நாடகங்கள், எட்டு சிறுகதைத் தொகுப்புகள் என எழுதிக் குவித்தார்.

To watch Biography of Rabindranath Tagore in Tamil @ YouTube

இரவீந்தரநாத் தாகூர்  வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்க




இலக்கியம், ஆன்மீகம், சமூகம், அரசியல் ஆகியவைப் பற்றி விழிப்புணர்வூட்டும் பல கட்டுரைகளையும் அவர் எழுதினார். இவையெல்லாம் தவிர்த்து அவருக்கு ஓவியம் வரையவும் நேரம் இருந்தது. சிறு வயதிலிருந்தே பள்ளிக்கூட பாடதிட்டங்களையும், ஆசிரியர் கற்பிக்கும் முறைகளையும் விரும்பாத தாகூர் அந்தக்கால குருகுல முறைப்படி ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கி அதில் நன்முறையில் கல்வி கற்பிக்க விரும்பினார். அதன் பயனாக அவர் 1901-ஆம் ஆண்டு தோற்றுவித்த ஒரு கலைக்கழகந்தான் சாந்தி நிகேதன். தன் செல்வத்தையும், எழுத்து மூலம் தான் ஈட்டிய பொருளையும் அந்தக் கல்வி நிலையத்திற்காக செலவிட்டார். அந்த கல்விக்கழகத்தில் மொழிகளும், கலைகளும் இயற்கைச் சூழலில் கற்பிக்கப்பட்டன. ஆசிரியர்களும் மாணவர்களும் அங்கேயே தங்கி கற்பித்தனர், கற்றனர். 
இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்கள் சாந்தி நிகேதனில் கல்வி கற்றனர். அன்னல் காந்தியடிகள் அந்தக் கல்வி நிலையத்திற்கு வருகை புரிந்தார். ஜவஹர்லால் நேரு அந்தக் கல்வி நிலையத்தின் மீது அதிக அக்கறை காட்டினார். இந்தியாவின் முன்னால் பிரதமர் இந்திராகாந்தி அந்த நிலையத்தில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடதக்கது. சாந்தி நிகேதன் கலைக்கழகம் சிறிது சிறிதாக வளர்ச்சிப் பெற்று பின்னர் 'விஷ்வ பாரதி' பல்கலைக்கழகம் என்றானது. இன்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் அந்த பல்கலைக்கழத்தில் கல்வி பயில வருகின்றனர். 
இரவீந்தரநாத் தாகூருக்கு அழியாப் புகழை பெற்றுத் தந்தது 103 கவிதைகளின் தொகுப்பாய் அவர் படைத்த அமர காவியமான கீதாஞ்சலிதான். அந்தக் கவிதைகள் உயரிய தத்துவங்களையும், ஆன்மீக சிந்தனைகளையும் அடிப்படையாக் கொண்டவை. முதலில் தனது தாய்மொழியான வங்காளத்தில் எழுதியதுடன் பின்னர் தாமே அவற்றை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தார் தாகூர். 1912-ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலியை உலகம் ஆங்கிலத்தில் படித்து வியந்தது. அதற்கு அடுத்த ஆண்டே 1913-ல் அந்த இலக்கியத்திற்கு நோபல் பரிசை வழங்கி மகிழ்ந்தது நோபல் குழு. நோபல் பரிசுத் தொகை தாகூருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதனைக் கொண்டு சாந்தி நிகேதன் கல்வி நிலையத்தின் செலவுகளை பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணினார். ஆனால் அவருக்கு ஒரு வருத்தமும் இருந்தது மேல்நாட்டு உலகம் தன் படைப்பைப் பாராட்டிய பிறகுதான் சொந்த நாட்டு மக்களின் பாராட்டும், கவனமும் தன் நூலுக்கு கிடைத்தது என்பது குறித்து வருந்தினார். 
தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை கல்கத்தாவில் உள்ள ஒரு வங்கியில் போட்டு வைத்தார். துரதிஷ்டவசமாக அந்த வங்கி நொடித்துப் போனது. தாகூரின் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் வகையில் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் 1915-ஆம் ஆண்டு அவருக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது. ஆனால் 1919-ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த விருதை திருப்பி அனுப்பி விட்டார் தாகூர். உலகம் போற்றும் அன்னல் காந்தியடிகளை 'மகாத்மா' என்று முதலில் அழைத்துப் போற்றியவர் தாகூர்தான் என்று வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. 

ஒருநாட்டின் மிக முக்கியமான பாடலான தேசிய கீதத்தை எழுதும் கெளரவம் மிகச்சிறந்த கவிஞர்களுக்குதான் வழங்கப்படும். அந்த கெளரவத்தைப் பெற்ற இரவீந்தரநாத் தாகூர் எழுதித் தந்த இந்திய தேசிய கீதம்தான் 'ஜன கண மண' இந்தியாவிற்கு மட்டுமல்ல வங்காள தேசத்திற்கும் அவர்தான் தேசிய கீதத்தை எழுதித் தந்தார். உலக வரலாற்றில் இரண்டு நாடுகளின் தேசிய கீதத்தை எழுதிய தனிப் பெருமை இரவீந்தரநாத் தாகூருக்கு மட்டுமே உண்டு. இந்திய இலக்கிய உலகிற்கு அனைத்துலக பெருமையை பெற்றுத் தந்த இரவீந்தரநாத் தாகூர் 1941-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள் தனது 80-ஆவது அகவையில் காலமானார். 
தாகூர் நோபல் பரிசை பெற்று கிட்டதட்ட 100 ஆண்டுகள் ஆகப் போகின்றன. வேறு ஒரு இந்திய இலக்கியத்தால் இன்னும் அந்த உச்சத்தை எட்ட முடியவில்லை. அதுவே இரவீந்தரநாத் தாகூரின் பெருமைக்கு அளவுகோல். முறையாக கல்வி பயிலாமலும்கூட தாகூரால் நோபல் பரிசை வெல்ல முடிந்ததென்றால் நம்மால் சாதிக்க முடியாதது எது? என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். ஓர் இலக்கை வகுத்துக் கொண்டு தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் உரமாக விதைத்து தைரியமாக முன்னேறினால் தாகூருக்கு வசப்பட்டதுபோல் நிச்சயம் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்!.

To watch Biography of Rabindranath Tagore in Tamil @ YouTube

இரவீந்தரநாத் தாகூர்  வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்க