Biography of Lord Baden Powell - லார்ட் பேடன் பவல் (தலைமை சாரணர்) வாழ்க்கை வரலாறு

 ஒரு படை வீரனின் வீரம் அவனது  உடல் வலிமையில் இருக்கிறது, அனால் ஒரு  படை தளபதியின் வீரம் தனக்கு கீழ் இருக்கும் ஒட்டுமொத்த வீரர்களையும் வெற்றிகரமாக வழி நடத்துவதில் இருக்கிறது. அதற்கு வித்தியாசமாக சிந்திக்கும் திறன், என்ன நடக்க போகிறது என்று முன்கூட்டியே எதிர்பார்த்து அதற்கு எதிரான நடவடிக்கைகளை வகுகும் தொலைநோக்கு, தங்கள் பலவீனத்தை கூட எதிரியிடம் பலமாக காட்டும் துணிவு ஆகியவை அவசியம். அதுபோன்ற குணநலன்களை  கொண்ட படைத்தளபதிகளை வரலாறு அவ்வப்போது சந்தித்து வந்துருக்கிறது. அப்படிபட்ட ஓர் உன்னத தளபதியாக தன் வாழ்க்கையை தொடங்கி  பின்னர் உலகுக்கு இரண்டு மாபெரும் இயக்கங்களை தந்த ஒரு வித்தியாசமான வீரரின் கதையை பார்ப்போம். 


       1800களின் இறுதியில் ஆப்ரிக்காவில் நடைபெற்ற போயர் போரில் மாபெகிங் என்ற பகுதியை தற்காக்கும் பொறுப்பு அந்த தளபதியிடம் இருந்தது. அவரிடம் இருந்ததெல்லாம் சுமார் 1500 வீரர்களும், சில போர் கருவிகளும் மட்டும்தான். அவற்றை வைத்துக்கொண்டு வலிமை வாய்ந்த சுமார் 9000 போயர் படைகளை இருநூறு நாட்களுக்கு மேல் கோட்டைக்குள் நுழைய முடியாமல் பாடாய்ப்படுத்தினார் அவர்.  வெறும் புத்திகூர்மையால்  போயர் படைகளின் பல தாக்குதல்களை முறியடித்து 326 வீரர்களை மட்டும் இழந்து தன் எல்லையை காப்பாற்றினார் அந்த அதிசிய தளபதி. அவர் வேறு யாருமல்ல பின்னாளில் இராணுவத்தில் இருந்து விலகி சாரணர் இயக்கத்தை தோற்றுவித்த லார்ட் பேடன் பவல். 

       1857ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் லண்டனில் பேடிங்டன் என்னும் இடத்தில் பிறந்தார் பேடன் பவல். 10 பிள்ளைகளில் 8வது அவர். அவருக்கு மூன்று வயதாகும்போதே தந்தை இறந்துபோனார். சிறுவயதிலிருந்தே சுட்டியாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தார் பேடன் பவல். சரி என்ற பகுதியில் அமைந்திருந்த பள்ளியை சுற்றி காடாக இருந்தது. அந்த காட்டுக்குள் செல்வதற்கு பள்ளி பிள்ளைகளுக்கு அனுமதி கிடையாது. அனால் பேடன் பவல் எப்படியாவது எல்லோரின் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு காட்டுக்குள் செல்வார். எப்படி மறைந்திருந்து விலங்குகளை பிடிப்பது, எப்படி நெருப்பை உண்டாக்குவது, முயல் குட்டியை பிடித்து எப்படி சமைப்பது போன்றவற்றை சுயமாகவே அந்த காட்டில் சோதித்து பழகுவார். சட்டத்தை மீறி காட்டுக்குள் செல்லும் மாணவர்களை பிடிப்பதற்காகவே சில ஆசிரியர்கள் கண்ணிகளில் எண்ணை ஊற்றிக் கொண்டு நோட்டமிடுவர். அவர்களுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்து விட்டு காட்டுக்குள் சென்று மகிழ்வதில் கில்லாடியாக இருந்தார்.

To watch Biography of Lord Baden Powell in Tamil @ YouTube

லார்ட் பேடன் பவல் (தலைமை சாரணர்)  வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்க





   பேடன் பவல். அவர் பள்ளிப்படிப்பில் அவ்வளவு சிறந்து விளங்கவில்லை. அவருடைய ஆண்டு இறுதி அறிக்கையில் கணிதத்தில் தேறமாட்டார் என்றும், வகுப்பில் சோம்பேறியாக இருப்பதுடன் அடிக்கடி தூங்குவார் என்றும் ஆசிரியர் எழுதி கொடுத்து இருக்கிறார். அவர் எதற்கும் லாயக்கில்லை என்று ஆசிரியர்கள் கைவிரித்து இருக்க வேண்டும். பாடங்களில் மந்தமாக இருந்தாலும் இராணுவத்திற்காக நடைபெற்ற ஒரு பொது தேர்வில் இரண்டாவது நிலையில் வந்தார் பேடன் பவல். இராணுவத்தில் அவர் அதிகாரியாக சேர்த்து கொள்ளபட்டார். தமது பிரிவுடன் அவர் இந்தியா, ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சேவை புரிந்தார். மிக விரைவாக பதவி உயர்வுகளை பெற்று 43 வயதிலேயே மேஜர் ஜெனரல் பதவியை எட்டினார். 

    பேடன் பவலின் வித்தியாசமான சிந்திக்கும் திறன் போயர் போரில்தான் வெளியானது. எதிரிகளை நிலைகுலைய செய்ய பலவித தந்திரங்களை அவர் கையாண்டார், உதாரணதிற்கு ஒருமுறை டின்கள் நிறைய மண்ணை நிரப்பி அதனை பயங்கரமாகா வெடிக்க செய்து தம்மிடம் பெரிய குண்டுகள் இருப்பது போன்ற பயத்தை எதிரி படைகளிடம் ஏற்படுத்தினார். பலமுறை மாறுவேடம் பூண்டு எதிரி படைகளிடம் ஊடுருவி இரகசியங்களையும் அறிந்து வந்து அதற்கேற்றார் போல் வியூகம் வகுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதுபோன்ற தனது சுவாரஸ்யமான இராணுவ அனுபவங்களை போர் முடிந்ததும்,  “Aids to Scouting என்ற புத்தகமாக வெளியிட்டார் பேடன் பவல். அது இராணுவதிற்கான பாடப்புத்தகமாகத்தான் எழுதப்பட்டது. 

       ஆப்ரிக்காவில் போர் முடிந்து கடைசியில் அவர் பிரிட்டன் திரும்பியபோது இங்கிலாந்து தேசம் முழுவதும் சிறுவர்களும், சிறுமிகளும் அவரது உருவம் பொறித்த பொத்தான்களை அணிந்து இருப்பதைக்கண்டார். அவரது போர்க்கால சாகசங்களால் பேடன் பவலை ஒரு நாயனகனாக பார்க்க தொடங்கி இருந்தது இங்கிலாந்து தேசம். இராணுவத்தின் பயன்பாட்டிர்காக  அவர் எழுதிய “Aids to Scoutingஎன்ற நூலை அமைதிக்கான பணிக்காகவும் பயன்படுத்த தொடங்கி இருந்தனர் பொது மக்கள். நூற்றுக்கணக்கான இளையர்களிடமிருந்தும் மாணவதலைவர்களிடமிருந்தும் அறிவுரை கேட்டு பேடன் பவலுக்கு கடிதங்கள் வந்து குவிய தொடங்கின. மாபெகிங் போரில் தனக்கு கீழ் பணியாற்றிய இளையர்கள் எந்த வேலையை கொடுத்தாலும் அதனை முழு மனத்தோடு செய்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. அதன் மூலம் ஒரு பையனிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டால் அந்த பையன் இன்னும் சிறந்த பொறுப்புள்ள பையனாக உருவெடுப்பான் என்று நம்பினார் பேடன் பவல். எனவே 1907ஆம் ஆண்டு அவர் 22 இளையர்களுக்கு வாழ்கை திறன்களில் பயிற்சி அளிப்பதற்காக அவர்களை அழைத்துக்கொண்டு டார்செட் பகுதியில் உள்ள பிரவுன்சீ  தீவில் முகாம் அமைத்தார். 

       அந்த குழுவில் பணக்கார பையன்களும் ஏழை பையன்களும் அடங்கியிருந்தனர். அப்போது நாம் என்ன செய்கிறோம் என்பதை பேடன் பவல் உணர்ந்திருக்க நியாம் இல்லை. அனால் அந்த முகாம் தான் சாரணர் இயக்கம் தோன்றுவதற்கு அஸ்திவாரம் அமைத்து தந்த முகாமாக அமைந்தது. அந்த முகாமில் புதிய புதிய பயிற்சிகளை சோதித்து பார்த்த பேடன் பவல் இராணுவத்திற்காக தான் எழுதிய புத்தகத்தில் நிறைய மாற்றங்களை செய்தார். அவ்வாறு அவர் செய்த மாற்றங்களோடு வெளியான புத்தகம்தான் “Scouting for Boys” என்ற புத்தகம். புத்தகம் வெளியானதிலுருந்து சாரணர் இயக்கம் வலுபெற தொடங்கியது. நாடு முழுவதும் சாரணர் குழுக்கள் தொடங்கப்பட்டன. வீரதீரத்தையும் விளையாட்டையும் விரும்பிய பெண்கள் தங்களுக்காக சாரணியர் இயக்கம் ஒன்றும் வேண்டும் என்று கோரிக்கை விடுக்க தொடங்கினர். அந்த இயக்கம் வளர்ந்த வேகத்தை பார்த்து வியந்து போனார் மன்னர் ஏழாம் எட்வர்ட். அவர் பேடன் பவலை அழைத்து இராணுவத்தில் இருந்து வெளியாகி முழுமையாக சாரணர் இயக்கத்தை வழிநடத்துமாறு கேட்டுக்கொண்டார்.

        முதலில் தயங்கிய பேடன் பவல் மன்னர் கேட்டுக்கொண்டதை போலவே இராணுவத்தில் இருந்து வெளியாகி சாரணர் இயக்கத்திற்காக உழைக்க தொடங்கினார். தான் இராணுவத்தில் காட்டிய முனைப்பையும் உத்வேகத்தையும் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு அவர் சாரணர் இயக்கத்தின் வளர்ச்சியில் காட்டினார். பெண்களுக்காக “Girl Guides” என்ற இயக்கத்தையும் உருவாக்கினார். சில ஆண்டுகளில் சாரணர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பேடன் பவலுக்கு தலைமை சாரணர் என்ற பட்டத்தை தந்து கௌரவித்தனர்.  செக்கோஸ்லோவாக்கியா, கிரீஸ், ஹங்கேரி உட்பட 28 நாடுகள் அவரை கௌரவித்தன. மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அவருக்கு லார்ட் பட்டத்தை வழங்க, அவர் லார்ட் பேடன் பவல் ஆனார். ஆறு பல்கலைகழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கி சிறப்பித்தன. தன்னுடைய துடிப்பாலும் திறமையாலும் உலகிற்கு  இரண்டு உன்னத இயக்கங்களை தந்த லார்ட் பேடன் பவல் 1941ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி தனது 83வது வயதில் காலமானார்.

     கென்யாவில் உள்ள அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டிருக்கும் எளிய வாசகம் “ராபர்ட் பேடன் பவல் உலகின் தலைமை சாரணர்” என்பதாகும். 1907ஆம் ஆண்டு லார்ட் பேடன் பவல் தோற்றுவித்த சாரணர் இயக்கம் இன்று உலகம் முழுவதும் பரவி 150க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பள்ளி மாணவர்கள் பெருமையுடன் சாரணர் இயக்கத்தில் சேர்ந்து சில வாழ்க்கை திறன்களையும் நற்பண்புகளையும் கற்று கொள்கின்றனர். இத்தனையையும் சாதியமாக்கியவர் பள்ளிகூடத்திற்கு லாயக்கற்றவர் என்று ஆசிரியர்களால் கைவிடப்பட்ட அந்த பேடன் பவல்தான். 

      உலகம் முழுதும் சாரணர்கள் எடுத்துக்கொள்ளும் தலையாய உறுதிமொழி என்ன தெரியுமா? ஒரு நாளில் குறைந்தது ஒரு நல்ல காரியத்தையாவது செய்ய வேண்டும் என்பதுதான். எவ்வளவு உன்னதமான உறுதிமொழி? சாரணர் மட்டுமன்றி உலக மக்கள் அனைவருமே அந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டால், உலகம் எவ்வளவு சிறந்த புன்னகை பூமியாக மாறமுடியும் என்பதை சிந்தித்து பாருங்கள். அப்போது புரியும் பேடன் பவல் நமக்கு விட்டுச்சென்றிருக்கும் சொத்தின் மதிப்பு. நாம் ஒரு சாரணராக இருந்து அப்படிப்பட்ட உறுதிமொழியை எடுத்து கொள்ள தேவையில்லை. பேடன் பவலை போல தினசரி நம் வாழ்வில் ஏதாவது ஒரு வகையில் ஒரு நல்ல காரியத்தை செய்ய வேண்டுமென்று ஒவ்வொருவரும் உறுதிபூண்டால் போதும், அனைவருக்குமே அந்த வானம் வசப்படும்.     


To watch Biography of Lord Baden Powell in Tamil @ YouTube

லார்ட் பேடன் பவல் (தலைமை சாரணர்)  வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்க